[X] Close

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்


pollachi-issue

  • kamadenu
  • Posted: 13 Mar, 2019 11:15 am
  • அ+ அ-

பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசா ரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்: உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை நடத்துவதே உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இன்று பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளது. இந்த அநீதியை எதிர்த்து கட்சியின் மாவட்ட குழுக்கள் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: பொள்ளாச்சியில் பெண்களுக்கு நேர்ந்துள்ள வன்கொடுமையை அறியும்போது சட்டம் ஒழுங்கு நிர்வாகம் செத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி விரைவாக விசாரித்து குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தனது மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். தேசிய மகளிர் ஆணையமும், தேசிய மனித உரிமை ஆணையமும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வரும் 14-ம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி மட்டும் எப்படி நியாயமாக விசாரித்திடும். எனவே, பொள்ளாச்சி பாலியல் பயங்கர வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு செய்யத் தவறினால், உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக கையிலெடுத்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும். இந்தக் கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், அதற்கு துணை போனவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: கட்சி கண்ணோட்டம், அரசியல் நிறம் எவையும் உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்கு குறுக்கே நின்று குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிப்பதில் முட்டுக்கட்டை போட்டு விட கூடாது. நிர்பயா வழக்கில் நடந்ததைப் போல, வெகுவிரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வரும் 16-ம் தேதி சென்னையில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: எந்தப் பிரச்சினையிலும் நேர்மையாக நடந்து கொள்ளாத அதிமுக அரசு பொள்ளாட்சி விவகாரத்தில் மட்டும் எப்படி நேர்மையாக நடந்து கொள்ளும்? எனவே, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவர்களைத் தவிர, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வ.கவுதமன் உள்ளிட்டோரும் குற்றவாளிகளுக்கு கடும் தண் டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close