ஜூன் 23-ல் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உணவுக்காடு வளர்ப்பு, முக்கனி திருவிழா @ புதுக்கோட்டை


தமிழ்மாறன் | கோப்புப் படம்

சென்னை: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உணவுக்காடு வளர்ப்பு, முக்கனி திருவிழா புதுக்கோட்டையில் ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈசாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு மற்றும் மாபெரும் முக்கனி திருவிழா" ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் வரும் 23-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், தேசிய உணவு தொழில் நுட்ப தொழில் முனைவு மற்றும் வேளாண்மை நிறுவனம், மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து காவேரி கூக்குரல் இயக்கம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்று நம்மிடம் பழங்களை உட்கொள்ளும் பழக்கம் குறைந்துவிட்டது.

துரித உணவுக்கு வேகமாக மாறி வருகிறோம். இதனால் 50 சதவீத மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2045 - 2050 காலக்கட்டத்தில் 10 சதவீத உணவு உற்பத்தி குறையும் என சொல்லப்படுகிறது. மண் மலடாகி வருவதால், இந்த மண் வளத்தை கொண்டு 40 அல்லது 50 சதவீதம் வரை மட்டுமே உணவு உற்பத்தி செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. இந்த அழிவை தடுக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேடு, கால நிலை மாற்றத்தைச் சீர்ப்படுத்தவும் மரம் வளர்ப்பு தேவையாகிறது.

அதுவும் குறிப்பாக, பழ மரமாக இருந்தால், நம் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மேம்படும். நிலம் வளமாகும். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் மத்தியில் இதனை எடுத்துரைக்கும் வகையில் உணவுக்காடு வளர்ப்பு எனும் தலைப்பில் கருத்தரங்கமும், முக்கனி திருவிழாவையும் நடத்துகிறோம். இதில் பல மாநிலங்களில் இருந்து வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும், 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா பழங்கள், நூற்றுக்கணக்கான வாழை ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், 9442590081, 9442590079 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.