ராகுலின் 54-வது பிறந்தநாள்: தூய்மைப் பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய செல்வப்பெருந்தகை


படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை பங்கேற்று 54 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி, தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கட்சியின் நலிவடைந்த தொண்டர்களுக்கு நிதி உதவியும் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு தொண்டர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். ஏழை எளியவர்க்கு சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

முன்னதாக, சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் ஏற்பாட்டில், செல்வப்பெருந்தகை தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாந்தோம் தேவாலயத்திலும், அண்ணா சாலை தர்காவிலும் செல்வப்பெருந்தகை தலைமையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மகளிர் அணி தலைவி ஹசீனா சையத், எஸ்சி அணி தலைவர் ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், அடையாறு துரை, டில்லி பாபு, முத்தழகன், பொதுச் செயலாளர்கள் டி. செல்வம், தமிழ்செல்வன், அருள் பெத்தையா, அசன் மவுலானா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.