தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான தீர்ப்பாயம்: குன்னூரில் விசாரணை தொடக்கம்


குன்னூர்: சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் அமர்வு குன்னூரில் இன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் தலைமையில் நடந்தது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீடிப்பது அல்லது நீக்குவது தொடர்பாக சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாய அமர்வு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். சிமி என்று அழைக்கப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் 1977-ல் தொடங்கப்பட்டது. 2001-ல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு 2019-ல் ஐந்தாண்டுகளுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டது.

அந்தத் தடை உத்தரவு இன்றுடன் (ஜூன் 18) முடிவுக்கு வருவதால், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமார் கெளரவ் தலைமையிலான தீர்ப்பாயம் பல்வேறு இடங்களிலும் இதற்கான விசாரணையை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரண்டு நாட்களுக்கு தீர்ப்பாய விசாரணை நடைபெறுகிறது. இதையொட்டி குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

விசாரணைக்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமார் கெளரவ் தலைமைல் 15 பேர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர். நீதிபதி புருஷைந்திர குமார் கெளரவுக்கு தமிழக அரசு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த விசாரணையில் கலந்து கொண்டனர்.

இது குறித்து பதிவாளர் ஜித்தேந்திர பிரதாப் சிங் கூறியதாவது: ”சிமி இயக்கத்தினை தொடர்ந்து தடை செய்ய வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது. குன்னூரில் இன்று நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளையும் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.”என ஜித்தேந்திர பிரதாப் சிங் கூறினார்.