வேம்பார் கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உட்பட 2 பேர் உயிரிழப்பு


கோவில்பட்டி: வேம்பார் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி உட்பட 2 பேர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளாத்திகுளம் காமராஜ் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மகள்கள் சாதனா, சஹானா ஆகியோருக்கு நேற்று காது குத்தி முடியிறக்கும் விழா நடத்தினார். தொடர்ந்து இன்று பிற்பகலில் விழாவில் பங்கேற்ற உறவினர்கள் சுமார் 20 பேர் ஒரு வேனில் வேம்பார் கடலுக்கு குளிக்கச் சென்றனர். அவர்கள் வேம்பார் ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால், குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக கடலில் இருந்து வெளியேறி கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென ஆர்ப்பரித்து வந்த பேரலையில், சிறுமி சாதனா (5) கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த தங்க முத்துப் பாண்டி மகன் டேனி (25) என்பவர் அவரை காப்பாற்ற முயற்சித்தபோது, அவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த உறவினர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக கரைப்பகுதியில் இருந்த மீனவர்கள், கடலுக்குள் இறங்கி, இருவரையும் தேடி, மீட்டு வந்தனர். அவர்கள் மயக்க நிலையில் இருந்ததால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

அங்கு அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூரங்குடி கடலோர காவல்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.