தேவகோட்டை அருகே அரசு பேருந்து மரத்தில் மோதி 13 பேர் காயம்


தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அரசு பேருந்து மரத்தில் மோதியதில் 13 பேர் காயமடைந்தனர்.

காரைக்குடியில் இருந்து ஆராவயல் வழியாக தேவகோட்டைக்கு இன்று 3 ‘A’ என்ற அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை தற்காலிக ஓட்டுநர் ஜான் என்பவர் ஒட்டினார். கண்டதேவி கிராம அருகே வளைவில் திரும்பியபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் காயமடைந்தனர். மேலும், பேருந்தின் படிக்கட்டுகள் தனியார் தோட்டத்தின் தடுப்பில் சாய்ந்து நின்றதால் பயணிகள் இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தின் உதவியுடன் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகளை ஜன்னல் வழியாக வெளியில் தூக்கி காப்பாற்றினர். விபத்தில் காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த நடத்துநர் கண்ணன் (53), பயணி சுப்பம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக ஆராவயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.