[X] Close

சென்னையின் முக்கிய ஏரிகளை சென்சார் மூலம் கண்காணிக்க திட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்


chennai-lakes-to-be-monitored

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 10:39 am
  • அ+ அ-

சென்னையின் முக்கிய ஏரிகளை சென்சார் மூலம் கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது: மாநகராட்சியின் சொத்து வரி இலக்கு ரூ.1,350 கோடியாகவும் தொழில் வரி இலக்கு ரூ.500 கோடியாகவும் இருக்கும். ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய செலவினத்துக்காக ரூ.799.51 கோடி, உட்புற மற்றும் பேருந்து சாலை பணிகளுக்காக ரூ.537.22 கோடி, மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ள ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகவுனி சாலையில் பாலம், ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லாவில் பாலம் உட்பட பாலங்கள் பணிகளுக்காக ரூ.227.70 கோடி, தெருவிளக்கு கட்டமைப்புகளுக்காக ரூ.171.35 கோடி, துப்புரவு பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டிடத் துறைக்கு ரூ.165 கோடி, சிறப்பு திட்டங்கள் துறைக்கு ரூ.175 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள தெரு விளக்குகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. சென்னைக்கு வெள்ளத்தால் இனி பாதிப்பு ஏற்படாத வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள், முக்கிய கால்வாய்களில் சென்சார் பொருத்தப்படும். நீர்மட்டம் உயரும்போது, சென்சார் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில், வெள்ள தடுப்பு கண்காணிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது. அடையாறு - கூவம் வடிகால் பகுதிகளில் ஒருங்கிணைந்த வடிகால் அமைக்கும் பணிகள், செப்டம்பரில் தொடங்கப்பட்டு 3, 4 ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த திட்டங்கள் நிறைவடைந்தால் சென்னைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாது. மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 200 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு போகக் கூடாது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 200 இடங்களில் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. வீட்டுக்கு வீடு குப்பைகளை வாங்கும் ஊழியர்களுக்கு பேட்டரி முறையில் இயங்கும் மிதிவண்டிகள் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close