[X] Close

இதுவரை நடந்துள்ள 16 மக்களவை தேர்தல்களில் தமிழகத்தில் 13 தேர்தலில் ஓங்கிய ‘கை’


loksabha-elections

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 10:08 am
  • அ+ அ-

தமிழகத்தில் இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தல்களில், 13 தேர்தல்களில் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணியே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் கட்சி, 1951-52-ல் நடந்த முதலாவது பொதுத்தேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் 1967 வரை காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 1967-ல்திமுக ஆட்சியைப் பிடித்ததும் காங்கிரஸின் வெற்றிப் பயணம் தடைபட்டது. காங்கிரஸ் 1969-ல்இந்திரா காங்கிரஸ் - ஸ்தாபன காங்கிரஸ் என்று பிளவுபட்டது. 1971 மக்களவைத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக 23, காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது.

1972-ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு அதிமுகவுடன் காங்கிரஸ் நெருங்கத் தொடங்கியது. நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பிரதமராக இருந்த இந்திரா காந்தியே தோற்றுப் போனார். ஆனால், தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக 17, காங்கிரஸ் 14 இடங்களில் வென்றது.

1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 20, திமுக 16, முஸ்லிம் லீக் 1 எனதிமுக - காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

1984-ல் அதிமுக 12, காங்கிரஸ் 25 இடங்கள், 1989-ல் காங்கிரஸ் 27, அதிமுக 11 இடங்கள், 1991-ல் காங்கிரஸ்28, அதிமுக 11 இடங்கள் என அதிமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ச்சியாக அமோக வெற்றி பெற்றது.

 1996-ல் காங்கிரஸில் இருந்து விலகி, தமாகாவை தொடங்கினார் ஜி.கே.மூப்பனார். இத்தேர்தலில் திமுக - தமாகாகூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றது.

1998 மக்களவைத் தேர்தலில் திமுக 5, தமாகா 3, இந்திய கம்யூனிஸ்ட் 1 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும், திமுக - தமாகா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.

1999-ல் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தமாகா, பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 2 தொகுதிகளில் வென்றது. அதிமுக 10 தொகுதிகளில் வென்றது. 

1980-க்குப் பிறகு, அதாவது 24 ஆண்டுகள் கழித்து, 2004-ல் திமுக - காங்கிரஸ் மீண்டும் கூட்டணி சேர்ந்தன. இத்தேர்தலில் திமுக 16, காங்கிரஸ் 10, பாமக 5, மதிமுக 4, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

2009-ல் திமுக 18, காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றன. 2014-ல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. 

கடந்த 16 மக்களவைத் தேர்தல்களில் 1998, 1999, 2014 தவிர மற்ற 13 மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணியே அதிக தொகுதிகளில் வென்றுள்ளது.

1996-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்த தமாகா இடம்பெற்ற திமுக கூட்டணி 100 சதவீத வெற்றியைப் பெற்றது. தனித்துப் போட்டியிட்டபோது, தோல்வியைத் தழுவிய காங்கிரஸ், இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close