[X] Close

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு குறித்து திமுக குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


dmk-issue

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 07:47 am
  • அ+ அ-

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுச்சேரி உட்பட 10, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 என 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையை திமுக முடித்துள்ளது.

தேமுதிக பிடிவாதம்

பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சி தோல்வி அடைந்ததால் தேமுதிகவை இழுக்க திமுகவும், காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். தேமுதிகவுக்காக ஒரு தொகுதியை விட்டுத்தர காங்கிரஸ் முன்வந்துள்ளதால் 4 தொகுதிகளை தர திமுக ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 7 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக பிடிவாதம் பிடிப்பதால் இழுபறி நீடிக்கிறது. அதிமுக, பாஜக தலைவர்களும் தேமுதிகவுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவர் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்க திமுக விரும்புகிறது.

ஆனால், இந்த கட்சிகள் தலா 2 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. அதுபோல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சியும் விரும்பவில்லை. இதனால் முடிவு எட்ட முடியாத நிலை இருப்பது குறித்து ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close