மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் என குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர்மாதம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நிலப்பிரச்சினை தொடர்பாக கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

பின்னர் இந்த கொலை வழக்குதொடர்பாக ஆசிரியர் பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பாசில், போரிஸ் மற்றும் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில்ஐயப்பன் அப்ரூவராக மாறினார்.

இதையடுத்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு தூக்குதண்டனையும் மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில்நடந்தது.

அப்போது குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை. இந்தவழக்கில் கொலைக்கான காரணம்,கூட்டுச்சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சரிவர நிரூபிக் கப்படவில்லை.

அரிதிலும், அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க முடியும். வீடியோ ஆதாரங்கள் மட்டுமே பிரதான சாட்சியங்களாக குறியீடு செய்யப்பட்டுள்ளது கண்ணால்பார்த்த சாட்சியங்கள் காலதாமதமாகவிசாரிக்கப்பட்டன. அப்ரூவர் ஐயப்பனின் சாட்சியமும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என வாதிட்டனர்.

காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.பிரபாகரன் உள்ளிட்ட புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடும்போது, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கவனத்தில் கொண்டே மரண தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்யவேண்டும். அப்ரூவராக மாறிய நபர்கொலைக்கான காரண, காரியங்களை தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். அரசு தரப்பு சாட்சியங்களும் குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளன என வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள்இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

குற்றம் நிரூபிக்கப்படவில்லை: இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மீதானகுற்றச்சாட்டுகளும் அரசு தரப்பில் தகுந்த சாட்சியங்களுடன் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம் எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், இந்த 9 பேரும் வேறு வழக்குகளில் தொடர்பில்லை என்றால் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்