[X] Close

5 சீட் வழங்கிய கட்சியா? 10 சீட் வழங்கிய கட்சியா? - அடிமைக் கட்சிக்கு அமைச்சர் புதிய விளக்கம்


admk

திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதியில் சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக கட்சியினர்.

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 12:32 pm
  • அ+ அ-

திருப்பரங்குன்றம் தொகுதி யைச் சேர்ந்த வலையங்குளத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. வி.வி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ. உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியது: அதிமுக கூட்டத்தில் மட்டுமே பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பர். ஜெயலலிதா இல்லாத நிலையில் நம்மை அனைவரும் உற்று நோக்குகின்றனர். 8 கோடி பேர் கொண்டாடும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். அவரது திட்டங்களால் எண்ணற்ற பெண்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

முதல்வர் கே.பழனிசாமியின் ஆட்சி 2 நாட்கள் கூட தாங்காது என்றனர். ஆனால், 2 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. எடப்பாடி என்றால் யார் என்று மதுரைக்கு முதன்முதலில் அவர் வரும்போது கேட்டவர்கள் எல்லாம், எடப்பாடியார் வாழ்க என முழக்கமிடும் சூழல் உருவாகியுள்ளது.

 1 லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகனங்களுக்கு மானியம், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு தொழில்களை கொண்டுவந்து, 11 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என சாதித்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்தும் மாதிரி கிராமசபைக் கூட்டம் மக்களிடம் எடுபடவில்லை. ஸ்டாலின் ஏன் இதுபோல் செயல்படுகிறார் என மக்களே கேட்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்.

திமுக எங்களை பாஜக.வின் அடிமை என தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. தற்போது மத்தியில் ஆட்சியிலேயே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 சீட்டுகளை ஒதுக்கி உள்ளது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவுக்கு அதிமுக வெறும் 5 தொகுதிகளைத்தான் ஒதுக்கி உள்ளது. இதில் இருந்தே யார் அடிமை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அதிமுக, பாஜக இடையே நல்ல புரிதல் இருந்ததால் சீட்களின் எண்ணிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கூட்டணியின் வெற்றியே எங்களின் இலக்கு. எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி மேலாண்மை வாரியம் என பல சாதனைகளை அடிமையாக இருந்து பெற்றோம் என்றால் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close