[X] Close

மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்க கூடாது? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி


tasmacc

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 07:22 am
  • அ+ அ-

தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? டாஸ்மாக் கடையின் நேரத்தை பகல் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை ஏன் மாற்றக் கூடாது? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த முத்துப் பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: டாஸ்மாக் கடையுடன் இணைந்த மதுபானக் கூடங்களில் (`பார்') உணவுப் பொருட்கள் விற்பனை செய்யவும், காலி பாட்டில்களைச் சேகரிக்கவும் உரிமம் வழங்கும் டெண்டரை மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிப்.21-ல் வெளியிட்டார்.

அதில் உரிமம் பெற பிப்.22 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது. தமிழ்நாடு வெளிப் படையான டெண்டர் விதிப்படி ரூ.2 கோடி வரையுள்ள டெண்டருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், `பார்' டெண்டருக்கு 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது, டாஸ்மாக் மேலாண் இயக்குநரின் உத்தரவின் பேரில் டெண்டர் விண்ணப்பங்களை வழங்க குறைந்தகால அவகாசம் வழங்கபட்டதாகத் தெரிவித்தார். இது சட்டவிரோதம். இதனால் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கூட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து அதைச் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், 'டெண்டர் விண்ணப்பத்தை நேரிலும் பெற முடியவில்லை. டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் மதுபானக்கூட உரிமம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது' என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘தமிழகத்தில் பெரும்பாலான குற்றச்செயல்கள் `பார்'களிலேயே நடக்கின்றன. `பார்'களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. மாணவ, மாணவிகள் மதுப் பழக்கத்துக்கு ஆளாகுவதும் அதிகரித்து வருகிறது' என்றனர்.

மேலும், தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? டாஸ்மாக் கடையின் நேரத்தை பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை ஏன் மாற்றக்கூடாது? மதுபான கூடங்களை (`பார்') ஏன் நிரந்தரமாக மூடக்கூடாது? `பார்' உரிமக் காலத்தை ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக உயர்த்தியது ஏன்? என்பது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12-க்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close