புதுச்சேரியில் விஷவாயு உயிரிழப்புகள்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட அதிமுக வலியுறுத்தல்


புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் உள்ள வீடுகளின் கழிவறைகளில் இருந்து கடந்த 11-ம் தேதியன்று வெளியேறிய விஷவாயுவால் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மயக்கமடைந்தனர்.

இந்நிலையில், 3 பேர் உயிரிழப்புக்கு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு தான் காரணம் எனக்கூறியும், ஆளும் அரசைக் கண்டித்தும் புதுச்சேரி அதிமுகவினர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அலுவலக வளாகத்தினுள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: 3 பேர் உயிரிழப்புக்கு முதல் காரணமே பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தகுதியற்ற ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது தான். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திலிங்கம் முதல்வராகவும், நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த போது ஒரு நிறுவனத்துக்கு சுமார் ரூ.285 கோடி அளவில் பாதாள சாக்கடை பணி செய்ய டெண்டர் வழங்கப்பட்டது. அந்த நிறுவனம் இந்த பணியை செய்ய அனுமதிக்கப்பட்ட அளவீட்டை விட 20 சதவீதம் குறைவாக டெண்டர் போட்டு பணியை எடுத்தது.

இதில் ஏறத்தாழ ரூ.20 கோடிக்கு மேல் கமிஷன் பெற்றுக்கொண்டு பணியானை வழங்கப்பட்டது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பல பணிகளை திட்டமிட்டு இந்த நிறுவனம் செய்யாமல் விட்டதினால் இன்று விஷவாயு தாக்கி மூவர் மரணமடைந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திமுக-காங்கிரஸ் ஆட்சியின் போது ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் தாங்களாகவே பாதாள சாக்கடை இணைப்பை அமைத்துக்கொள்ளலாம் என அரசு எங்கும் இல்லாத வகையில் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதனால் தகுதியற்ற பல ஒப்பந்ததாரர்கள் தங்களது மனம் போன போக்கில் வீட்டுக்கு இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் இணைப்பு வழங்கும் போது கேஸ் வெளியாகாமல் இருக்கு வாட்டர் ஷீல் வைக்க வேண்டும். அதுவும் வைக்கப்படவில்லை. இவையெல்லாம் அரசே பொதுமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் அல்லது வீட்டில் உள்ளவர்களே நேரடி இணைப்பு கொடுப்பதற்கு பணி செய்தாலும் பொதுப்பணித்துறையில் உள்ள அதிகாரிகள் அந்த பணியை ஆய்வு செய்து அவர்களின் வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் அரசு அதையும் செய்யவில்லை.

குறிப்பாக இந்த பகுதியில் அரசின் தவறினால் ஏற்பட்ட துர்நாற்றம் சம்பந்தமாக பொதுமக்கள் பலமுறை துறையின் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மெத்தன போக்குடன் இருந்துள்ளனர். இதற்கு அதிகாரிகளே முதல் காரணம். தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். பணியை செய்த நிறுவனம், பணியை மேற்பார்வையிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் இப்பணிகளில் நடைபெற்ற ஊழல் உள்ளிட்ட அனைத்தையும் விசாரணை வலையத்துக்குள் முதல்வரும், துணைநிலை ஆளுநரும் கொண்டுவர வேண்டும்.

ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள விபத்தினால் அரசு அங்கு கவனம் செலுத்துகிறது. எதிர்காலத்தில் மாநிலம் முழுவதும் இதுபோன்ற பாதாள சாக்கடை விஷவாயு தாக்குதல் நிச்சயமாக நடைபெறும். புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து இது சம்பந்தமான அதிகாரிகள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். கரோனா காலத்தில் அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்பட்டதோ அதேபோன்று இந்த கழிவுநீர் கால்வாய் விஷவாயு விவகாரத்திலும் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.