[X] Close

பிரதமர் மோடியின் ஆட்சியால் நாடு 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது: திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு


stalin-speech

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில், திராவிட கொள்கை விளக்க அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் கி.வீரமணி. உடன், கே.எஸ்.அழகிரி, இரா.முத்தரசன், காதர்மொகிதீன், அருணன், கலி.பூங்குன்றன்.

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 08:43 am
  • அ+ அ-

பிரதமர் மோடியின் ஆட்சியால் நம் நாடு 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூரில் நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் அமர்சிங் வரவேற்றார்.

இதில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசியது: சமூக நீதியை குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கிற ஒரு அரசாக மத்திய அரசு உள்ளது. அதைக்கூட நேரடியாக செய்யாமல், மறைமுகமாக கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்ற பெயரில் செய்து வருகிறது. அண்மையில், 5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி தோற்றுவிட்டார். அதனால்தான் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்குவதற்காக ரூ.6 ஆயிரம் கொடுக்கும் தந்திரத்தை கையில் எடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் ஆட்சியால், நம் நாடு 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. மீண்டும் அவர் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு இல்லை.ராகுல் காந்திதான் பிரதமர் என நான் அறிவித்த சூழல் நிச்சயம் வரப் போகிறது என்றார்.

மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியபோது, “அரசியல் வரலாற்றிலேயே கூட்டணி, தொகுதிப் பங்கீடு விரைவாக முடிந்தது நம்முடைய கூட்டணியில்தான். ஆனால், உலக வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 2 கட்சிகளோடு கூட்டணிக்காக பேரம் பேசிய கட்சி பாமகதான். அவர்கள் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. நாம் அமைத்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது, “திமுகவும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்பார்கள். இப்போது விடுதலை சிறுத்தை கட்சியும் சேர்ந்துள்ளதால் மூன்று குழல் துப்பாக்கி” என்றார்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். சமூக நீதிக்கு எதிராக உள்ள, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close