தூத்துக்குடியில் 4,000 நாட்டுப் படகுகளில் அதிகாரிகள் குழு ஆய்வு


தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நாட்டுப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் குழுவினர்  ஆய்வு நடத்தினர் | படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரம் நாட்டுப்படகுகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என மீன்வளத்துறை அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகுகளின் நிலை குறித்து ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். இந்த ஆய்வில் நாட்டுப்படகுகளின் நீளம், அகலம், இயந்திரத்தின் குதிரைத் திறன் மற்றும் படகின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகளில் இந்த ஆண்டுக்கான ஆய்வு இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் உள்ளன. இந்தப் படகுகளில் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் தொடர் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே 15 நாட்களுக்கு முன்பு முறையாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) காசிநாதபாண்டியன் நேரடி மேற்பார்வையில், உதவி இயக்குநர்கள் விஜயராகவன், புஷ்ரா சப்னம், ராஜதுரை ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த மீன்வளத்துறை ஆய்வாளர்கள், அலுவலர்கள் 82 பேர் 41 குழுக்களாக பிரிந்து இந்த ஆய்வை நடத்தினர்.

படகுகளின் நீளம், அகலம், இயந்திரத்தின் குதிரைத் திறன், பதிவு எண், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மானிய அட்டை, பதிவு சான்றிதழ், அரசு சார்பில் வழங்கப்பட்ட விஎச்பி கருவியின் செயல்பாடு மற்றும் படகு இயங்கும் நிலையில் உள்ளதா என்பன குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் தான் படகுகளுக்கு மானிய டீசல், மண்ணெண்ணெய் போன்ற அரசின் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கு மானிய டீசல், மண்ணெண்ணெய் போன்ற அரசின் சலுகைகள் நிறுத்தப்படும்.

மேலும், பதிவு செய்யாத படகுகளிலும் ஆய்வு செய்யப்பட்டு, அவைகள் இயங்கும் நிலையில் இருந்தால், முறையாக விண்ணப்பித்தால் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.