[X] Close

மதுரை நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் திருப்பம்; விசாரணையை தாமதப்படுத்தினால் ஆவணங்களின் அடிப்படையில் இறுதி தீர்ப்பு: சிபிஐக்கு நீதிபதிகள் எச்சரிக்கை


madurai-daily-office

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 11:06 am
  • அ+ அ-

மதுரையில் நாளிதழ் அலுவலகத் தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கின் மேல்முறையீடு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், விசாரணையை சிபிஐ மேலும் தாமதப்படுத்தினால் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மதுரையில் நாளிதழ் அலுவலகம் ஒன்றில் 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் நாளிதழ் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி, டிஎஸ்பி ராஜாராம் உட்பட 17 பேர் மீது ஒத்தக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம் அட்டாக்பாண்டி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து 2009-ல் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்துசெய்து, அனைவருக்கும் தண்டனை வழங்கக்கோரி சிபிஐ சார்பில் 2011-ல் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி, பெட்ரோல் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு 8 ஆண்டாக நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தியதால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர்கைது செய்யப்பட்டனர். தயாமுத்து மட்டும் மலேசியாவில் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்களின் பட்டியலை பதிவுத்துறையிடம் பெற்றது. அப்போது 2011 முதல் நிலுவையில் இருந்து வரும் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு தொடர்பாக அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை பாதிக்கப்படுகிறது. எனவே, தயாமுத்து சார்பில் ஆஜராக வழக்கறிஞர் என்.அனந்த பத்மநாபன் நியமனம் செய்யப்படுகிறார். இவர்தயாமுத்து சார்பிலும், வழக்கறிஞர்கள் வைக்காத பிற எதிர்மனுதாரர்கள் சார்பிலும் இந்த நீதிமன்றத்தில் ஆஜராவார்.

தள்ளிவைக்க முடியாது

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் வாதிட தமிழ் தெரிந்த ஒரு வழக்கறிஞரை நியமிக்க சிபிஐ விரும்புவதாக சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த காரணத்துக்காக விசாரணையை தள்ளி வைக்க முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அரசுவழக்கறிஞரின் திறன் அடிப்படையில் விசாரணையை தள்ளிவைக்க இடமில்லை.

இதையும் மீறி விசாரணையை தாமதப்படுத்த சிபிஐ நினைத்தால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 386-ன் கீழ் வழக்கின் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி நீதிமன்றமே இறுதி தீர்ப்பை வழங்கும். எனவே இந்த வழக்கு பிப்.26-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்று இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி இறுதி விசாரணை தொடர்பாக வாதங்களை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close