முதல் நகராட்சியாக கொடைக்கானலில் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் வரி வசூல்


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் "பாயின்ட் ஆப் சேல்" (பிஓஎஸ்) கருவி மூலம் வரி நிலுவை வசூலில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் கொடைக்கானல் நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகராட்சி மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, சாக்கடை வரி, தொழில் வரி ஆகியவை வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தும் ஏராளமானோர் வரி செலுத்தாமல் உள்ளனர். வரி செலுத்த மக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வருவார்கள் என அலுவலகத்தில் காத்திருக்காமல் நேரடியாக குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இது தொடர்பாக பேசிய கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், “வரி நிலுவையை வசூலிக்க செல்லும் போது கையில் பணம் இல்லாதவர்களும் வரி செலுத்த வசதியாக "பாயின்ட் ஆப் சேல்" (பிஓஎஸ்) கருவி வருவாய் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்கருவி மூலம் வங்கி ஏடிஎம் கார்டு அல்லது கூகுள் பே, யுபிஐ மூலம் வரி செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5 கருவிகள் மூலம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து வரி வசூல் செய்யப்படுகிறது.

ஆகவே, வரி செலுத்த மக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டிய கட்டாயம் இல்லை. வீடு தேடி வரும் வருவாய் அலுவலர்களிடம் நேரடியாக தங்களுக்கான வரி நிலுவையை செலுத்தலாம். பிஓஎஸ் கருவி அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்தி வரி வசூல் செய்யும் பணியை முதல் நகராட்சியாக கொடைக்கானல் நகராட்சியில் தொடங்கியுள்ளோம்” என்றார்.