[X] Close

மதுரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்குமா காந்தி மியூசியம்?- அரசுத் துறைகளிடமிருந்து நிர்வாகம் விலகி நிற்பதாக புகார்


gandhi-museum

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 11:38 am
  • அ+ அ-

மதுரைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளில் காந்தி மியூசி யத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கையை மியூசிய நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 1959-ம் ஆண்டு மகாத்மா காந்திக்காக மதுரையில்தான் முதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. 13.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த இடத் தை தமிழக அரசு நன்கொடையாக வழங்கியது. நாடு முழுவதும் உள்ள 17 காந்தி மியூசியங்களில் மதுரை காந்தி மியூசியம்தான் பரப்பளவில் பெரியது.

இந்த அருங்காட்சியகம் சுதந்திரப் போராட்ட வரலாறு, காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தி பயன்படுத்திய பொருட்கள் என 3 பிரிவுகளாகச் செயல்படுகிறது.

இங்குள்ள நூலகத்தில் காந்தியைப் பற்றியும், அவரது கொள்கைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள 28, 471 அரிய புத்தகங்கள் உள்ளன. காந்தி கைப்பட எழுதிய 28, 225 கடிதங்கள், கைப்பிரதிகள் உள்ளன.

கடந்த காலத்தில் மதுரைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் காந்தி மியூசியத்தை பார்வையிடாமல் செல்ல மாட்டார்கள். அவரது கொள்கைகள் பற்றியும், சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றியும் ஒரு முழுமையான பார்வை கிடைக்கும் என்பதால் யாரும் காந்தி மியூசியத்தை தவற விடுவதில்லை. 2016-2017-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2017-2018-ம் ஆண்டுகளில் காந்தி மியூசியத்துக்கு கூடுதலாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 697 சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துள்ளதாக காந்தி மியூசிய நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் மதுரைக்கு வரும் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

இதுகுறித்து காந்தி மியூசிய பணியாளர்கள் கூறியது: 2017-2018ம் ஆண்டில் மொத்தம் 4 லட்சத்து 40 ஆயி ரத்து 460 சுற்றுலாப் பயணிகள் காந்தி மியூசியத் துக்கு வந்துள்ளனர். இதில், 3 லட்சத்து 40 ஆயிரத்து 955 பேர் உள்நாட்டுப் பயணிகள். 12 ஆயிரத்து 70 பேர் வெளிநாட்டினர். 87,435 பேர் மாணவர்கள். மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை யில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வெளிநாட்டினர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தாலும், வெளிநாட்டினர் வருகை கடந்த காலத்தைவிட குறைவுதான்.

மற்ற மாதங்களை ஒப்பிடும்போது ஆகஸ்ட்டில் 76 ஆயிரத்து 833 பேரும், அக்டோபரில் 37 ஆயிரத்து 458 பேரும், டிசம்பரில் 36 ஆயிரத்து 601 பேரும், மார்ச் மாதத்தில் 50 ஆயித்து 884 பேரும் அதிகம் வந்துள்ளனர். மற்ற மாதங்களில் காந்திமியூசியத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது.

2016-2017-ம் ஆண்டில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 763 பேர் மட்டுமே வந்துள்ளனர். இதைவிட 2017-2018ம் ஆண்டில் கூடுதலாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 697 பேர் வந்துள்ளனர்,’’ என்றனர்.

மதுரைக்கு ஓராண்டுக்கு 1 கோடியே 58 லட்சத்து 34 ஆயிரத்து 288 சுற்று லாப்பயணிகள் பல்வேறு சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர். அவர்களில் வெறும் 4 லட்சத்து 40 ஆயிரத்து 460 பேர் மட்டுமே காந்தி மியூசியத்துக்கு வந்து செல்கின்றனர்.

மற்றவர்கள் மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், சித்திரைத் திருவிழாவை பார்க்கவும் அதிகம் வந்து செல்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் காந்தி மியூசி யத்துக்கு வரவழைப்பதற்கான முயற்சியை அதன் நிர்வாகம் ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

உலகம் அறிந்த தலைவரான காந்தியின் பல்வேறு பெருமைகளைத் தாங்கி நிற்கும் மதுரை காந்தி மியூசியம் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விலகி நிற்பதாகவே கருதப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, மாநகராட்சி மற்றும் இந்து அறநிலையத் துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் காந்தி மியூசிய நிர்வாகம் இணைந்து செயல்பட்டு காந்தி மியூசியத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த மியூசியம் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close