குமரியில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம்


போராட்டத்தில் பங்கேற்று கோஷமிட்ட ஊரக வேலையுறுதி திட்டத்தை சேர்ந்த பெண்கள்.

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 11 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றவும், 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலுக்கு முன்பு குமரி மாவட்டம் மழுவதும் பரவலாக ஊராட்சி பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தல் முடிந்ததால் இக்கோரிக்கையை முன்வைத்து மீண்டும் ஊராட்சி தலைவர்கள் அமைப்பினர் போராட்டத்தை துவங்கியுள்ளனர். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று குமரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் நல அமைப்பு சார்பில் ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைப்பதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

பேராட்டத்திற்கு குமரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் நல அமைப்பின் தலைவர் அஜித்குமார் தலைமை வகித்தார். வெள்ளிச்சந்தை ஊராட்சி தலைவர் கென்னடி, நுள்ளிவிளை ஊராட்சி தலைவர் பால்ராஜ், முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன் உட்பட திரளான ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டு கிராம ஊராட்சிகளை பேரூராட்சி, மற்றும் நகராட்சிகளுடன் இணைப்பதற்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.

போராட்டத்தில், ஊராட்சிகள் பேரூராட்சியாக மாறினால் ஊரக வேலையுறுதி திட்ட பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் இருந்து பரவலாக பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நீடிக்கும் என ஊராட்சி தலைவர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.