[X] Close

சென்னையின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அமைக்கப்பட்டு வரும் தேர்வாய் கண்டிகை ஏரி பணிகள் 4 மாதத்தில் முடியும்: துரைமுருகன் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில்


chennai-s-drinking-water-issue

துரைமுருகன்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 09:05 am
  • அ+ அ-

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

துரைமுருகன் (எதிர்க்கட்சி துணைத் தலைவர்): ‘கஜா’ புயல்வருவதற்கு முன்பு அரசு காட்டிய வேகம், புயல் தாக்கிய பிறகு இல்லை என்று வாரப் பத்திரிகையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்காதவர்களும் தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று கோரியதால்தான் பிரச்சினை ஏற்பட்டது.

துரைமுருகன்: வறட்சி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கு நிவாரணத் தொகைகோரும்போது, மத்தியில் காங்கிரஸ் அல்லது வேறு எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும்மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கின்றன. மொத்த நிவாரணத் தொகையில் மத்திய அரசு 4 சதவீதம் மட்டுமே கொடுத்துள்ளது.

முதல்வர் பழனிசாமி: முன்பு மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. அதேநேரத்தில் மத்தியகூட்டணி ஆட்சியிலும் திமுக இடம்பெற்றிருந்தது. அப்போதும் வறட்சிநிவாரணம் உள்ளிட்ட எந்த நிவாரணத் தொகையும் தேவையான அளவு தரப்படவில்லை. இப்போது நாங்கள் மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறோம். இருப்பினும், தேவையான நிவாரணத் தொகையை பெற தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

துரைமுருகன்: சென்னையில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண என்ன செய்திருக்கிறீர்கள்? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது புதிதாக 2 ஏரிகள் உருவாக்கப்படும், தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன்கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என்றார். அவற்றில் எதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

முதல்வர் பழனிசாமி: தேர்வாய்கண்டிகையில் புதிய ஏரி உருவாக்குவதற்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தாமதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்தி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஏரி அமைக்கும் பணி 4 மாதங்களில் முடிவடையும். அடுத்த பருவமழையின்போது புதிய ஏரியில் நீர் தேக்கப்படும். திமுக ஆட்சியில் போரூரில் பாலம் கட்ட நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் போரூர் பாலப் பணிகள் முடித்து திறக்கப்பட்டது. புறவழிச்சாலை, விரைவுச் சாலை என எந்த திட்டமாக இருந்தாலும் நிலம் கையகப்படுத்துவதில்தான் பிரச்சினை ஏற்படுகிறது.

துரைமுருகன்: கடந்த 2015-ம்ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் 4.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது?அமைச்சர் எம்.சி.சம்பத்: 2015-ம்ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்கள் மூலம் 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தபோது,“சாலையில் சென்றவர்களையெல்லாம் அழைத்து வந்து உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் பங்களிப்பு செய்யும் முதலீட்டாளர்களை கொச்சைப்படுத்துவது அவரது தகுதிக்கு அழகல்ல. நியாயமும் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close