[X] Close

பிளாஸ்மா பவுடர் சோதனைக்கு அனுமதி பெறச் சென்றபோது டெல்லி தீ விபத்தில் திருச்சியை சேர்ந்த ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளர் பரிதாப மரணம்


researcher-pradeepa-s-death-from-trichy-in-delhi-fire-accident

எஸ்.சங்கரநாராயணன்

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 08:50 am
  • அ+ அ-

திருச்சி வயலூர் சாலை ராமலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் எஸ்.சங்கரநாராயணன்(55). இவரது மனைவி பாரதி, மகன் ராகவசிம்ஹன் அமெரிக்காவில் முதுநிலை மருத்துவமும், மகள் ரங்கபிரியா சென்னையில் இளநிலை பல் மருத்துவமும் பயின்று வருகின்றனர்.

சங்கரநாராயணன், கடந்த சில ஆண்டுகளாக ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக, எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் வி.ஆர்.ரவி என்பவருடன் இணைந்து மதர்செல் ரீஜெனரேட்டிங் சென்டர் என்ற ஆராய்ச்சி மையத்தை திருச்சியில் நிறுவினார்.

குறிப்பாக, ரத்தம் அவரசமாக தேவைப்படுவோருக்கு, ரத்தத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பவுடராக்கி, அதை குளுக்கோஸ் மூலம் நரம்புகளில் செலுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்த இருவரும், இதற்காக அரசிடம் அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் ஹோட்டலில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி சங்கரநாராயணன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மருத்துவர் வி.ஆர்.ரவி, ‘இந்து தமிழிடம்' கூறியது: 2012 முதல் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறோம். பிளாஸ்மா பவுடர் நுண்ணுயிரிகள் நீக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுவதால், ரத்ததானம் பெறுவோருக்கு எச்ஐவி உள்ளிட்ட எந்த நோய்த்தொற்று அச்சமும் தேவையில்லை.

யுத்த களத்துக்குச் செல்லும் ராணுவ வீரர்களுக்கு பிளாஸ்மா பவுடர் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏற்கெனவே விளக்கியுள்ளோம். தொடர்புடைய அனைத்துத் துறைகளின் அனுமதியைப் பெற்று வந்து விண்ணப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார்.

விலங்குகளுக்கு பிளாஸ்மா பவுடரை செலுத்தி சோதனை செய்யடெல்லியில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ளோம். இதற்காக ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உரிய ஆவணங்களை ஏற்கெனவே அளித்துவிட்டோம்.

இந்நிலையில், பிளாஸ்மா பவுடரை மனித உடலில் செலுத்தி சோதனை செய்ய அனுமதி பெறுவதற்காகவும், வெளிநாடுகள் கடைபிடிக்கும் விதிகள்- ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சகத்தில் அளிக்கும் நோக்கிலும் டெல்லி சென்றிருந்தபோதுதான் தீ விபத்தில் சிக்கி சங்கரநாராயணன் இறந்தார்.

அவரது மறைவு ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் பேரிழப்பு. அவரது கனவை நிறைவேற்ற தொடர்ந்து ஆய்வில் ஈடுபடுவோம் என்றார்.

சங்கரநாராயணனின் உடல் நேற்று சென்னை வந்தடைந்தது.வேளச்சேரி அருகே விஜய்நகரில் 15-ல் இறுதிச் சடங்கு நடக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close