[X] Close

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நாமக்கல் இளைஞர் கைது: பிடிக்க முயன்ற ஊர்க்காவல் படை வீரர் காயம்


breaking-atm-machine-and-trying-to-steal-money

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 12:40 pm
  • அ+ அ-

பெரம்பலூரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பெரம்பலூர் வெங்கடேசபு ரத்தில் தனியார் வங்கியின் முன்புறம் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவர், தனது சட்டையை கழட்டி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மூடிவிட்டு, கம்பியைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார்.

அந்த வழியே சென்ற சிலர், சத்தம் கேட்டு, புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊர்க்காவல் படை வீரர் கண்ணன்(35) அங்கு சென்று, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற இளைஞரை பிடிக்க முயன்றபோது, அந்த இளைஞர் கண்ணனை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

அவரை ஊர்க்காவல் படை வீரரும், பொதுமக்களும் விரட்டிச் சென்றனர். அப்போது, அந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி அருகேயுள்ள இடையப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ்(22) என்பதும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனியார் பாதுகாப்பு பணி கண்காணிப்பாளராக பணிபுரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். கீழே விழுந்ததில் காயமடைந்த அவரும், தாக்குதலில் காயமடைந்த ஊர்க்காவல் படை வீரர் கண்ணனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு முயற்சி நடைபெற்ற ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.5.81 லட்சம் இருந்ததாக வங்கியாளர்கள் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close