[X] Close

தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்து; தமிழகத்தில் பாஜக கூட்டணி விரைவில் அறிவிப்பு: தேசிய செயலர் முரளிதர ராவ் தகவல்


bjp-coalition-to-announce-soon

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:21 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித் துறையில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஏராளமானோர் ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலமாக நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். மக்களுடன் அவரது தொடர்பு அதிகரித்துள்ளதால் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது. வேளாண்மைத் துறை, தொழில் துறை, ஜவுளித் துறையில் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பாஜகவின் நோக்கம்.

கூட்டணி பேச்சுவார்த்தை

கடந்த 10-ம் தேதி திருப்பூரில் புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்துள்ளார். தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.

முன்னதாக, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை வளாகத்தில், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளித் துறையினருடன் முரளிதர ராவ் ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close