பேரா.நிர்மலா தேவியுடன் கைதான உதவி பேரா.கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் வழங்கியது

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வழக்கில் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியுடன் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் கருப்பசாமி, முருகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உதவிபேராசிரியர் கருப்பசாமி, முருகன் தரப்பில், இந்த வழக்குக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை, எனவே உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக காவல்துறை 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இது தொடர்பாக பதிலளித்த தமிழக காவல்துறை, முருகன், கருப்பசாமி மீது குற்றம் உள்ளது,
இவர்கள் மூலம் தான் இந்த குற்றச்செயல் தொடங்கியுள்ளது. எனவே இவர்களுக்கு தற்போது ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனவே முருகன், கருப்பசாமிக்கு ஜாமின் வழங்கக்கூடாது என பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள உதவி பேராசிரியர்கள் கருப்பசாமிக்கு, முருகன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.