மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதில் தமிழ்நாடு மின்வாரியம் தீவிரம்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் தொடங்கி உள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, மின்சாரத்தில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மத்திய அரசும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மின்சார வானங்களின் பயன்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகனங்களுக்கு தடையின்றி சார்ஜிங் செய்ய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீட்டர் தூரத்துக்கும், மாநகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீட்டர் தூரத்துக்கும் ஒன்று என்ற வீதத்தில் சார்ஜிங் மையங்களை அமைக்குமாறு மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக மின்வாரியம் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள 100 இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க கடந்த 2022-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மின்சார வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காகன சார்ஜிங் மையங்களை அமைக்க கடந்த 2022-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால், பின்னர் பல்வேறு காரணங்களால் இத்திட்டப் பணிகள் முடங்கியது.

தற்போது, தனியார் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் மையங்களை அமைத்து வருகிறது. எனவே, மின்வாரியமும் சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள துணை மின் நிலையங்கள் அருகில் இந்த சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மையங்கள் அமைக்கப்படும்” என்றனர்.