[X] Close

களைகட்டிய ரயில்கள், ரயில் நிலையங்கள்; மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பயணம்: செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி; குளுகுளு ஏசியால் குழந்தைகள் குதூகலம்; இன்றும் இலவசம்


metro-stationss

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இலவசம் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. இடம்; சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம். படம்: பு.க.பிரவீன்

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:39 am
  • அ+ அ-

சென்னையின் 2 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதால், அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து, 10-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களின் முழுமையான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச பயணத்துக்கும் நேற்று இரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டது. சைதாப்பேட்டையில் சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சின்னமலை - டிஎம்எஸ் தடத்தில் மதியம் 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை தாமதமாக இயக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பிறகு, 2 வழித்தடங்களிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

பெரும்பாலான மெட்ரோ ரயில்நிலையங்களில் நேற்று காலை முதலே பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்தவண்ணம் இருந்தனர். ரயிலில் ஏறிய பிறகு, உற்சாகத்துடன் செல்போன்கள் மூலமாக புகைப்படம், வீடியோக்களை எடுத்துக்கொண்டனர். சிலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஏசி வசதியுடன் குளுகுளு பயணம் மேற்கொண்டது, குழந்தைகள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியது. பலரும் ரயிலைவிட்டு இறங்க மனமில்லாமல், இரு மார்க்கத்திலும் மாறி மாறி பயணித்தபடி இருந்தனர்.

தொடர்ச்சியாக அலுவலக நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய விரும்பிய பலரும் கட்டணவிவரங்கள், இதர சலுகைகள் உள்ளிட்டவற்றை ரயில் நிலையகவுன்ட்டர்களில் கேட்டு தெரிந்துகொண்டனர்.

முழு தகவல் பெறுவது எப்படி?

‘CMRL’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஆண்ட்ராய்டு செல்போன் செயலி (App) உள்ளது. மெட்ரோ ரயில் கட்டண விவரம், வழித்தடங்கள், பயண நேரம், அருகில் உள்ள பேருந்து நிலையம், பேருந்து எண்கள், பாதுகாப்பு உதவி எண்கள், அட்டைகள் மூலம்பயணக் கட்டணத்துக்கு ரீசார்ஜ்செய்வது, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, பயணிகளுக்கான முக்கிய அறிவிப்புகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சுற்றுலாதலங்கள் உள்ளிட்ட வசதிகளை அந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மெட்ரோ ரயிலில் நேற்று ஒரேநாளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மேலும் கூறியதாவது:சின்னமலை அருகே மெட்ரோ ரயில் இயக்கத்தில் நேற்று சிறிது நேரம் கோளாறு ஏற்பட்டது. அதன்பிறகு, முழு அளவில் 45 கி.மீ. தூரத்துக்கும் இடையூறின்றி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. 12-ம் தேதியும் (இன்று) கட்டணமின்றி இலவசமாகவே மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யலாம்.

போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், வசதியாக, விரைவாக செல்ல முடியும் என்பதால், மெட்ரோரயிலில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரயில்நிலையங்களில் இருந்து தேவையான இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்ஸிகள் சேவை விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெட்ரோ ரயில் பயணம் குறித்து பொதுமக்கள் கூறியது:

ஆர்.சிவகுமார் (சைதாப்பேட்டை): சென்னையில் தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. வாகனப் புகையில் இருந்து இருந்து விடுபட்டு, ஓரளவுக்கு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

எஸ்.பிரதீவ்குமார் (கிண்டி): நான் இதுவரை மெட்ரோ ரயில்சுரங்கப் பாதையில் நீண்ட தூரம்பயணம் செய்தது இல்லை.

தற்போது அந்த அனுபவம் கிடைத்துள்ளது. கட்டணத்தில் சலுகை வழங்கினால், மக்கள் தினமும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள்.

பி.பார்வதி (வண்ணாரப்பேட்டை): சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் பிரம்மாண்டமாக, விமான நிலையம் போல இருக்கிறது. மக்களை கவரும் வகையில் அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால், செல்போன் சிக்னல் கிடைக்காதது ஒரு குறை. இதற்கு நிர்வாகம் விரைவில் தீர்வு காண வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close