தடை செய்யப்பட்ட பிறகும் நெய்வேலியில் மாமிசக் கடைகளில் தொடரும் பாலித்தீன் பைகள் பயன்பாடு

நெய்வேலி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மாமிசக் கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளின் பயன்பாடு குறையவில்லை.
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் மறுசுழற்சி செய்ய இயலாத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள் பல்வேறு வணிக நிறுவனங்களில் சோதனையிடுகின்றனர். இருப்பில் வைக்கப்பட்டுள்ள பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து, அபராத தொகையும் விதித்து வருகின்றனர்.
தடை அமல்படுத்தப்பட்டு 1 மாதத்திற்கு மேலாகியும், மாமிசக் கடைகளில் பாலித்தீன் பைகளின் பயன்பாடு தாராளமாகப் புழங்கிவருகிறது. வாடிக்கையாளர்கள் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானோர் வெறும் கையோடு வருகின்றனர். எனவே அவர்களுக்கு இந்தப் பையில் வழங்குவது தான் எளிதாக இருப்பதாக மாமிசக் கடை உரிமையாளர்கள் சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.
சில வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, "ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாமிச உணவுக்கு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் காலையில் வாக்கிங் செல்லும்போது, வழியில் தென்படும் மாமிசக்கடைகளில் வாங்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற முடியும்" என்றனர். "சிறு சிறு வணிக நிறுவனங்களை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தும் அரசு அலுவலர்கள், இதுபோன்ற தெருவோரக் கடைகளையும் ஆய்வுசெய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வாடிக்கையாளர்களை மாற்றவேண்டிய கடமையும், சமூக பொறுப்புணர்வும், விற்பனையாளருக்கு உண்டு. அவர்கள் தான் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் தாமரை இலையிலும், பாத்திரங்களைத் தான் பயன்படுத்தினர். எனவே விற்பனையாளர்கள் சமூகக் கண்ணோட்டத்தை மனதில் கொண்டு செயல்படவேண்டும்" என்கிறார் கடலூர் பசுமைச் சூழல் அமைப்பின் செயலாளர் முரளிதரன்.