[X] Close

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பூர் வருகை: சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்


modi-tirupur

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 09:39 am
  • அ+ அ-

அரசு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காகவும், மக்களவைத் தேர்தல்பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பூர் வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அங்கிருந்து 100 மீ தொலைவில் அரசுவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பகல் 2.35 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரசு விழா நடைபெறும் இடத்துக்கு மாலை 3.05 மணிக்கு வருகிறார்.

அரசு விழாவின்போது சென்னையில் டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை திருப்பூரில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் பி.தனபால் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

அரசு விழா நடைபெறும் பகுதியில் மூன்று ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக் கூட்டம் இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பாஜகபொதுக்கூட்ட மேடைக்கு 3.25 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். 4.15 மணிவரை தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 5.10 மணிக்கு கோவை வழியாக கர்நாடகா புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக தமிழக பாஜக தலைவர்கள் முகாமிட்டு பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவிநாசி - பெருமாநல்லூர் வரை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு, குண்டு துளைக்காத 4 கார்கள் ஏற்கெனவே திருப்பூர் கொண்டுவரப்பட்டுள்ளன. வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 60 பேர் கொண்ட சிறப்புப் பாதுகாப்பு படையினர், ஐ.ஜி. ஏ.கே.சிங் தலைமையில் பாதுகாப்புப் பணிகளை செய்துள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பூர் வந்தனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி., 3 டி.ஐ.ஜி.-க்கள், 19 காவல் கண்காணிப்பாளர்கள், 14 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,40 துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பங்கேற்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ்

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றன. இதில் இறுதிக்கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வழியாக டிஎம்எஸ் வரை சுமார் 10 கிமீ தூரத்துக்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்க தயாராகவுள்ளது. இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்ட்ரல், உயர் நீதிமன்றம், மண்ணடி ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னையில் நடக்கும் விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

விமான நிலையத்தில் இருந்து ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், சென்ட்ரல் வரையில் ரூ.50 எனவும் அதன்பிறகு உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை வரையில் செல்ல ரூ.60 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் ஸ்மார்ட் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் அட்டையை வாங்கி பயணம் செய்தால் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் தள்ளுபடி பெற முடியும்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close