[X] Close

மக்கள் மனம் கவர்ந்த சின்னதம்பி


chinnathambi

சின்னதம்பி யானை- கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 11:16 am
  • அ+ அ-

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கிராம மக்களால் ’சின்னதம்பி’ என்றழைக்கப்படும் காட்டு யானை, கடந்த 15 நாட்களாக 200 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.

தென்னக நதிகளின் தண்ணீர்த் தொட்டியான மேற்குத் தொடர்ச்சி மலை, பல்லுயிரிகளின் வாழ்விடமாகவும், ஆக்சிஜன் உற்பத்திக் கூடமாகவும் திகழ்கிறது. பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டிடங்கள் பெருகி வருகின்றன. இதனால், மலையையும், வனத்தையும் நம்பியிருந்த விலங்குகள், உணவும், தண்ணீரும் தேடி குடியிருப்புகளுக்குள் ஊடுருவும் நிலை. குறிப்பாக, ஊர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் பல மடங்காக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம்  கணுவாய்,  தடாகம்,  பன்னிமடை, வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர், உணவு தேடி யானைகள் ஊருக்குள் வருவதும், கிராம மக்கள் விரட்டுவதும் தொடர்கதையான ஒன்று. இப்பகுதிகளுக்கு வந்த இரு யானைகள், மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாததால், அவற்றுக்கு விநாயகன், சின்னதம்பி என பெயரிட்டு வாஞ்சையுடன் அழைக்கத் தொடங்கினர்.

எனினும், விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து, பயிர்களை நாசப்படுத்தியதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் எதிரொலியாக இரு யானைகளையும் பிடித்து, வேறு இடத்தில் விட வனத் துறை உத்தரவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் `விநாயகனை` மயக்க ஊசி போட்டும், கும்கி யானைகள்  உதவியுடனும் பிடித்தனர்.  பின்னர், அந்த யானையை முதுமலை வனப் பகுதியில் விட்டனர்.

இதற்கிடையில், மற்றொரு யானையான ‘சின்னதம்பி’-யை கடந்த ஜனவரி 25-ம் தேதி  மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதனுடன் சுற்றித் திரிந்த  பெண் யானை, குட்டி யானையை கும்கிகள் உதவியுடன் துரத்திவிட்டு, சின்னதம்பியைப் பிடித்தனர்.

அதன் மீது ரேடியோ காலர் பொருத்தியபின்,  பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் விட்டனர். வனப் பகுதியில் விடப்பட்ட 4 நாட்களில் சின்னதம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்தது.

பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி, கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் உலா வந்த யானையின் நடமாட்டத்தை, ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிந்துகொண்ட வனத் துறையினர், அதை  வனப் பகுதியில் விரட்ட முயன்றனர். ஆனாலும், அது திரும்பவும் குடியிருப்புகளிலும், விவசாய நிலங்களிலும் ஊடுருவியது.

சுமார் 100 கிலோமீட்டர் கடந்த நிலையில், கடந்த 1-ம் தேதி  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள தீபாலபட்டியில் தென்னந்தோப்புக்குள் ஊடுருவியது சின்னதம்பி. பின்னர் அங்கிருந்து  பள்ளபாளையம், மருள்பட்டி கிராமங்களைக் கடந்து, கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி சர்க்கரை ஆலை வளாகத்தில் முகாமிட்டுள்ளது.   இதைப் பிடிக்க கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் வரவழைக்கப்பட்டுள்ளன.

அதற்கான ஏற்ற சூழல் இருப்பதால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டிருந்த சின்னதம்பி, தன்னைப் பிடித்துச்  செல்வதற்காக வரவழைக்கப்பட்ட கும்கிகளுடன் விளையாடியது.  தொடர்ந்து  சர்க்கரை ஆலை வளாகத்தில் யானை தங்குவதை விரும்பாத ஆலை நிர்வாகம், யானை முகாமிட்டிருந்த குட்டையை மூடிவிட்டனர். அதனால், வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறியது. சுமார் 2 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள  செங்கழனிபுதூர் கிராமத்தில் வயல் வெளியில் ஊடுருவிய சின்னதம்பி, நெல் வயலுக்குள் நடந்து சென்றதால்,  வயல்கள் சேதம் அடைந்தன. மேலும், கரும்புக் காட்டுக்குள் சென்று,  வரப்புகளில் நடமாடியது.

`அடுத்து எங்கு செல்லும்? என்ன செய்யும்?` என்று தெரியாத வனத் துறையினர்,  விடிய விடிய காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னதம்பியின் ஒவ்வொரு நடவடிக்கையும் தினமும் ஊடகங்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறது. சமூக ஊடகங்களிலும்  ’சேவ் சின்னதம்பி’  என்ற வாசகங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. அதனால், தினமும் ஏராளமானோர் சின்னதம்பியைக் காண,  அது இருக்கும் இடம் நோக்கித் திரண்டு வருகின்றனர்.

இதுவரை 200 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்துள்ளபோதும், எந்த உயிருக்கும், உடமைக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை சின்னதம்பி. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மனங்களை வென்று, அன்பைப்  பெற்றுள்ளது சின்னதம்பி. உயர் நீதிமன்றம் காட்டும் நெறிமுறையின்படி காட்டு யானை வனப் பகுதிக்குள் கொண்டு விடப்படுமா அல்லது முகாம் யானையாக மாற்றப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close