[X] Close

கஜா புயலால் பாதித்த மரங்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு இலவச மரக் கன்றுகள்


gaja-cyclone

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 12:14 pm
  • அ+ அ-

கஜா புயலால் பாதித்த மரங்களுக்குப் பதிலாக மாற்று மரக்கன்றுகள், செடிகள் நடுவதற்கு அவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நவ.16-ம் தேதி கஜா புயலால் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தென்னை, வாழை, மா மரங்கள் அழிந்தன.

இந்த மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளையும், காய்கறிகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மாற்றாக செடிகளையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது: கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை மீண்டும் நடவு செய்யத் தேவையான நடவுப் பொருட்கள், கன்றுகள், செடிகளை அரசு தோட்டக்கலைத் துறை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களை மீண்டும் பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தோட்டக்கலைப் பயிர்களின் நடவுப்பொருட்கள் பெறுவதற்கு அருகில் உள்ள வட்டார அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

நடவுச் செடிகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பெயர், நில அளவு, நில உரிமை விவரங்கள், சாகுபடி செய்ய விரும்பும் பயிர், நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள பருவம், பரப்பு போன்ற விவரங்களை வட்டார அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

வாழை மரமாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு கன்றுகளை வாங்கி நடவு செய்வதற்கு விவசாயிகளுக்கு ரூ.26 ஆயிரம் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பண்ணையில் மாற்று காய்கறிச் செடிகள் வழங்க முடியாத பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், மானியங்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அருகில் உள்ள வட்டார தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை அனுகலாம் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close