[X] Close

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தடை இல்லாத பிளாஸ்டிக் உற்பத்திக்கு மாறலாம்: விதிமுறைகளை வெளியிட்டது மாசு கட்டுப்பாட்டு வாரியம்


plastic-ban

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 10:56 am
  • அ+ அ-

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தடை இல்லாதபிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு மாறுவதற்கான விதிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கிஎறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடையால் தமிழகத்தில் இயங்கி வரும் 8 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், அதை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்துவந்த நிறுவனங்கள், தடை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில், தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வதற்கான விதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புதிய விதிகளின்படி, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றவர்கள், அதே இயந்திரத்தை கொண்டு தடைபட்டியலில் இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி கோரி விண்ணப்பிக்

கலாம். ஆனால் அப்படி உற்பத்தி செய்யும்போது வெளியேறும் கழிவுநீரின் அளவு மற்றும் புகையை வெளியேற்றுவதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.

உற்பத்தியின் போது கடைசியாக கிடைக்கும் பொருளின் பெயரை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யமாட்டோம் என்று ரூ.100 மதிப்புக்கு குறையாத முத்திரை தாளில் எழுதிக்கொடுக்க வேண்டும். அந்நிறுவனத்தால் உருவாகும் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பாக விரிவான கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளின் மீது உற்பத்தியாளரின் பெயர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிறுவனத்தை பதிவு செய்த விவரம் மற்றும் நிறுவனத்தை இயக்குவதற்கு பெற்ற அனுமதி விவரம், உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் தடிமன் விவரம் ஆகியவற்றை அச்சிட வேண்டும்.

இவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள விதிகளில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி யாளர் சங்க சுற்றுச்சூழல் குழு தலைவர் பி.சுவாமிநாதன் கூறும்போது, “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில், அந்த பொருளை மட்டும் தான் உற்பத்தி செய்ய முடியும். அதில் பாக்கு மட்டை தட்டோ, வாழை இலை தட்டோ செய்துவிட முடியாது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிவிப்பால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close