[X] Close

பாமக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது: பிப்.20 வரை நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைப்பு


pmk-murder

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:26 am
  • அ+ அ-

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலர் வ.ராமலிங்கம்(45). இவர், கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு தன்னுடைய வாடகை பாத்திரக் கடையை மூடிவிட்டு, மகன் ஷியாம் சுந்தருடன் லோடு ஆட்டோவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், ராமலிங்கத்தை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து, ஷியாம் சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்தின்பேரில் போலீஸார், சிலரைப் பிடித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் முதல்கட்ட விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என திருபுவனம் முஸ்லிம் வடக்கு வீதி யாகூப் மகன் சர்புதீன்(60), மந்திரி அலி மகன் முகமது ரிஸ்வான்(23), குறிச்சிமலை ஆஜாபகுதீன் மகன் முகம்மது ரியாஸ்(27), திருபுவனம் சர்தார்கான் மகன் நிஜாம்அலி(33), திருவிடைமருதூர் அப்துல் கலாம் மகன் அசாருதீன்(26) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது, கொலை செய்தல் (ஐபிசி பிரிவு 302), தகாத வார்த்தைகளால் திட்டுதல்(294பி), கொலை முயற்சி(307), வழிமறித்தல்(341), ஆயுதங்களுடன் தாக்குதல் (147) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். ஆனால், 5 பேரையும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுமாறு நீதிபதி கூறியதை அடுத்து, போலீஸார் அவர்களை கும்பகோணம் முதலாம் எண் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு நேற்று மாலை அழைத்துச் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 5 பேரையும் பிப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close