[X] Close

பிப்.10 வரை சின்னதம்பி யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அறிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு


  • முத்தலீப்
  • Posted: 07 Feb, 2019 21:18 pm
  • அ+ அ-

பொதுமக்களுக்கு நண்பனாகவும், வனத்துறைக்கு சவாலாகவும் விளங்கும் சின்னதம்பி காட்டு யானையை கும்கி யானையாக மாற்றக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்க அப்படி எண்ணம் இல்லை என அரசு தெரிவித்து விட்டது. ஆனாலும் காட்டு யானை சின்னதம்பியால் தங்கள் பயிர்கள் நாசமாகின்றன, நிம்மதியாக நடமாட முடியவில்லை என ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சின்னதம்பி குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

கோவை மாவட்ட வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் வனத்துறையினரைத் திணறடிக்கும் சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைய, தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் காரணம் என முரளிதரன் தன் மனுவில் கூறியுள்ளார்.

மேலும் யானைகள் வழித்தடத்தில் இந்த செங்கல் சூளைகள் இருப்பதால், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சின்னதம்பி யானையைப் பிடித்து முகாமில் வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 10-ம் வரையிலான சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து அதுகுறித்து பிப்ரவரி 11-ம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close