[X] Close

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பாமக பிரமுகர் கொலையால் பதற்றம்: அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிப்பு


kumbakonam-pmk-person-murder

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்றம் செய்வதை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அசம்பாவிதம் தவிர்க்க திருபுவனத்தில் நேற்று குவிக்கப்பட்ட போலீஸார்.

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 11:11 am
  • அ+ அ-

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இந்து பிரமுகரும் பாமக முன்னாள் நகர செயலாளருமான நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தவிர்க்க அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ராமலிங்கம் (42). பாமகவின் திருபுவனம் நகர முன்னாள் செயலாளரான இவர், ஷாமியானா பந்தல் மற்றும் வாடகை பாத்திரக்கடை நடத்தி வந்தார். ஷாமியானா பந்தல் அமைக்கும் பணிக்கு கூலித் தொழிலாளர்களை அழைப்பதற்காக நேற்று முன்தினம் காலை திருபுவனத்தில் உள்ள பாக்கியநாதன் தோப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்த சிலருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கடையைப் பூட்டிவிட்டு லோடு ஆட்டோவில் ராமலிங்கம் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருபுவனம் முஸ்லிம் தெரு பகுதியில் லோடு ஆட்டோவை மறித்து நிறுத்தப்பட்ட காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 4 பேர், ராமலிங்கத்தின் 2 கைகளையும் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

2 கைகளும் வெட்டப்பட்டதால் ரத்தம் அதிகம் வெளியேறிய நிலையில், அந்த வழியே வந்த சிலர் ராமலிங்கத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் ராமலிங்கம் உயிரிழந்தார்.

இதையடுத்து, அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் விதமாக திருபுவனம் பகுதியில் தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 10 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள் உட்பட 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மதியம் திருபுவனத்துக்கு ராமலிங்கத்தின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது, ராமலிங்கத்தின் உறவினர்களும் சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரண்டு, கொலையாளிகளை கைது செய்தால்தான் உடலை தகனம் செய்வோம். அதுவரை தகனம் செய்ய மாட்டோம் எனக் கூறினர்.

மேலும், கொளையாளிகளை கைது செய்யக் கோரி திருபுவனம் கடைவீதியில் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ பதிவால் பரபரப்பு

இதற்கிடையே, திருபுவனத்தில் நேற்று முன்தினம் சிலருடன் ராமலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் நடந்தது போலவே சம்பவம் குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திருபுவனத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, "மதமாற்றத்தை தடுக்க முயன்றதன் விளைவாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் நடவடிக்கை எடுக்கவும், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

கேரளாவில் நடந்த சம்பவத்தைப்போல ராமலிங்கமும் கைகள் துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

3 தனிப்படைகள் அமைப்பு

கொல்லப்பட்ட ராமலிங்கத்துக்கு சித்ரா என்ற மனைவி, ஷ்யாம் சுந்தர், மலர்மன்னன், இளவரசன் ஆகிய மகன்களும் உள்ளனர். ஷ்யாம் சுந்தர் அளித்த புகாரின்பேரில், திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி எஸ்.எஸ்.மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியபோது, "ராமலிங்கம் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

ராமதாஸ் கண்டனம்

ராமலிங்கம் கொலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருபுவனம் பகுதியில் நடந்த மதமாற்றத்தை ராமலிங்கம் தட்டிக் கேட்டதாகவும், அது தொடர்பாக சிலருடன் அவருக்கு மோதல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்துக்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close