[X] Close

கும்பகோணம் அருகே கொற்கையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஐஸ்லாந்து பெண்ணுக்கு மணிவிழா


korkai-brahmmapureewarar-temple

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொற்கையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற, தனது மணிவிழாவையொட்டி நீராடிய ஐஸ்லாந்து பெண் அனா என்கிற அன்னலட்சுமி

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 10:12 am
  • அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொற்கையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் ஐஸ்லாந்து பெண்ணுக்கு நேற்று மணிவிழா நடைபெற்றது.

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐஸ்லாந்து, இத்தாலி, துபாய், கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து 22 ஜோதிடர்கள் ஆன்மிக தலங்களில் சுற்றுலா மேற்கொள்வதற்காக தமிழகத்துக்கு வந்தனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 27 நட்சத்திர கோயில்களிலும் வழிபாடு செய்ய திட்டமிட்டு கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி, நட்சத்திர திருத்தல யாத்திரையை தொடங்கினர்.

அதன்படி, அவிட்டம் நட்சத்திரத்துக்குரிய கோயிலான, கும்பகோணம் அருகே கொற்கையில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்தனர்.

வெளிநாட்டினர் 22 பேரில் ஒருவரான ஐஸ்லாந்தைச் சேர்ந்த பெண்ணான, அனா என்கிற அன்னபூரணி என்பவருக்கு 60 வயது பூர்த்தியானதையொட்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், கோ பூஜை என 51 கலச பூஜையை 11 வேதவிற்பனர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இதில், கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, நட்சத்திர திருத்தலங்களின் யாத்திரை குழுவை வழிநடத்தும் பார்த்திபன் கூறியதாவது:27 நட்சத்திர கோயில்களுக்கு யாத்திரை செல்வதற்கு திட்டமிட்டு பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வந்தனர். இதுவரை காஞ்சிபுரம், மதுரை, நாகை மாவட்டங்களில் உள்ள 23 கோயில்களை வழிபட்டுள்ளனர். 24-வது கோயிலாக கொற்கை கோயிலுக்கு வந்துள்ளோம். இன்றுடன் (நேற்றுடன்) ஐஸ்லாந்து பெண் அனா என்கிற அன்னபூரணிக்கு 60 வயது பூர்த்தியாவதால், மணிவிழா நடைபெற்றது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் கிராம மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

கும்பகோணம் பகுதியில் உள்ள 7 நட்சத்திர கோயில்களிலும் ஒரு வாரம் தங்கி வெளிநாட்டினர் வழிபாடு செய்ய உள்ளனர். இந்த நட்சத்திர திருத்தல யாத்திரை வரும் 8-ம் தேதி நிறைவுபெறுகிறது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close