[X] Close

குடியாத்தம் அருகே கொள்ளையர் என நினைத்து தாக்கப்பட்ட அசாம் இளைஞர் உயிரிழப்பு


assam-man-murder

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:41 am
  • அ+ அ-

கே.வி.குப்பம் அருகே கொள்ளையடிக்க வந்தவர் என நினைத்து கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதில் அசாம் மாநில இளைஞர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

வேலூர் மாவட்டம்கே.வி.குப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாநாதன் (60). இவரது வீட்டின் கதவை நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் தட்டியுள்ளனர். உறக்கத்தில் இருந்து எழுந்த கலாநாதன், கதவை தட்டுபவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்தகலாநாதனின் உறவினர்கள் வீட்டின் முன்பு நின்றிருந்தவர்களை பார்த்து சத்தம் போட்டுள்ளனர். கூட்டமாக வருவதைப் பார்த்து 2 பேர் தப்பி ஓடியுள்ளனர். அதில், ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். பிடிபட்ட நபரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கலாநாதனின் உறவினர்கள் உடலை அருகில் இருந்த பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இது தொடர்பான தகவல் கே.வி.குப்பம் போலீஸாருக்கு நேற்று காலை தெரியவந்தது. காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் விரைந்து சென்று இறந்த நபரின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவர் அசாம் மாநிலம் லக்கிமி நகரைச் சேர்ந்த குன்ஜனன் கர்பாலியா(34) என்பது தெரியவந்தது. அவரை கட்டி வைத்து அடித்து கொலை செய்ததாக கலாநாதன் (60), முரளி (40), விஜயன் (58) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தாக்க முயற்சி என புகார்

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரித்தபோது, நள்ளிரவில் கதவை தட்டிய அவர்களது கையில் கத்தி இருந்ததாகவும் கும்பலாக திரண்டு சென்றபோது தங்களை தாக்க முயன்றதாகவும் தெரிவித்தனர். எனவே, குன்ஜனன் கர்பாலியா தனியாக வந்தாரா அல்லது கூட்டாளிகளுடன் வந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close