[X] Close

குவியும் கட்டிடக் கழிவுகள்!- கோவையில் தாமதமாகும் மறுசுழற்சி மையம்?


building-waste

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 15:47 pm
  • அ+ அ-

தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில்நகரமான கோவையில், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பழைய கட்டிடங்களை இடிக்கும்போது டன் கணக்கில் கட்டிடக் கழிவுகள் உருவாகின்றன.

இவை பாழடைந்த கிணறுகளை மூடவும், பள்ளங்களை மூடவும் பயன்படுத்தப்படுகின்றன.  மற்றபடி, இந்த கட்டிடக் கழிவுகளை வேறெந்த  முக்கியப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்துவதில்லை.

இந்த நிலையில், டெல்லி, புனே நகரங்களில் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, 'பேவர் பிளாக் கற்கள்' போன்ற பயன்தரும் பொருட்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகராட்சியிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி நிர்வாகம், இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியது.

முதல்கட்டமாக  ரூ.12.50 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், அரசு, தனியார் பங்களிப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.9 கோடி மதிப்பில், திருத்தியமைக்கப்பட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக  கடந்த ஆண்டு டென்டர் விடப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டது.

கோவை உக்கடம் கழிவு நீர்ப்பண்ணை வளாகத்துக்கு செல்லும் வழியில், 15 ஏக்கர் பரப்பில் கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக இடம் தயார் செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நகரில் தினமும்  சேகரிக்கப்படும் 80 டன் முதல் 100 டன் வரையிலான கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.

கட்டிடக் கழிவுகளை கொட்டத் தொடங்கி, 10 நாட்களுக்குள் அவை பேவர் பிளாக் கற்களாக தயாரிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, டென்டர் பெற்ற நிறுவனத்துக்கு, ஒரு டன் கழிவுகளுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.567 கட்டணம் வழங்கப்படும். மேலும், கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்காக 18 இடங்கள் அறிவிக்கப்பட்டன.

ஒப்பந்தம் ரத்து

இதற்கிடையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவனம்,  சீனாவில் இயந்திரங்களை வாங்கியது. அவை சீனாவிலிருந்து கடல் வழியாக சென்னை துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டன. எனினும், டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்தில் நிலவிய பிரச்சினைகளால்,  துறைமுகத்திலிருந்து இயந்திரத்தை வெளியே எடுத்துவர தாமதம் ஏற்பட்டது. "இயந்திரத்தை விரைவில் வெளியே எடுத்துவந்து, திட்டத்தை தொடங்க வேண்டும்.

இல்லையேல், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்"  என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அந்த நிறுவனம் விளக்கக் கடிதம் அனுப்பியது. மீண்டும் மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட காலக்கெடு வழங்கியும், அந்த நிறுவனத்தால் இயந்திரத்தைக் கொண்டுவந்து, திட்டத்தை தொடங்க முடியவில்லை. இதனால், அந்த நிறுவனத்துடன், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக புதிய நிறுவனமும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. இதனால், கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,"கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் தாமதமாகி வருவதால், கோவை  மாநகரில் கட்டிடக் கழிவுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலை, உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலை, சுண்டக்காமுத்தூர் சாலை, முத்தண்ணன் குளம் சாலை, விளாங்குறிச்சி சாலை,

உக்கடம் கழிவுநீர் பண்ணை செல்லும் சாலை  உள்ளிட்ட நகரின் முக்கிய சாலையோரங்கள், நீர்நிலைகள் அருகில்  கட்டிடக் கழிவுகளை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும்

கட்டிடக் கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது" என்றனர்.

விரைவில் மையம் அமைக்கப்படும்

கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "கோவை மாநகரில் ரூ.9 கோடி மதிப்பில் கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.  கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனம், பணியை விரைவாகத் தொடங்காததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. புதிய நிறுவனத்தைத்  தேர்வுசெய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close