[X] Close

ஆம்பூர் அருகே ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை பொதுமக்கள் திறக்க முயற்சி: கல்வித் துறை அதிகாரிகள் சமரசம்


public-try-to-open-a-school

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 15:08 pm
  • அ+ அ-

ஆம்பூர் அருகே ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அரசுப்பள்ளி கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறையினர் திறக்காததால் பொதுமக்களே புதிய கட்டிடத்தை திறக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட மின்னூர் ஊராட்சியில் கடந்த 2015-16-ம் கல்வியாண்டில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு, 1-ம் வகுப்பு முதல் 10-ம் வரையிலான மாணவர்கள் படிக்க புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடமாக உருவாக்கப் பட்டது.

கட்டிடப்பணிகள் முடிவுப்பெற்று 2 ஆண்டுகள் கடந்தும், புதிய அரசுப் பள்ளி இன்னும் திறக்கப்பட வில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று புதிய பள்ளிக்கட்டிடத்தை திறப்பதற்காக பள்ளி வளாகம் முன்பு திரண்டனர். இது குறித்து மின்னூர் பொதுமக்கள் கூறும்போது, "மின்னூர் ஊராட்சியில் அரசுப் பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நூற்றாண்டை கடந்த இந்த பள்ளியில் தற்போது500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மின்னூர் மட்டுமின்றி, காளிகாபுரம், காட்டுக்கொல்லை, வடகரை, செங்கிலிகுப்பம், வடச்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப்பள்ளியாக இருந்த அரசுப் பள்ளி 2015-16-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டிடம் கட்ட பொதுமக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு, மின்னூரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு சொந்தமான ஓர் ஏக்கர் நிலத்தை பள்ளிக்கட்டிடம் கட்ட தானமாக வழங்கினார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்ட தொடங்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகளாகியும் பள்ளி கட்டிடத்தை திறக்கவில்லை. இதனால், மாணவர்கள் பழைய கட்டிடத்தின் வகுப்பறையிலேயே கல்வி பயின்று வருகின்றனர். பழைய கட்டிடத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். புதிய கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் இருந்தும், திறப்பு விழா நடைபெறாததால் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மேலும், அப்பகுதியில் சுற்றி முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இந்த புதிய கட்டிடம் அருகே அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்வதாக கூறி சிலர் பள்ளி வளாகத்தில் நுழைந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, மாலை நேரங்களில் மதுபான பாராக மாற்றி விடுகின்றனர். எனவே, மாணவர்களுக்காக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து செயல்பட முடிவு செய்தோம். அதன்படி, கடந்த 3 நாட்களாக ஊர் மக்கள் ஒன்று திரண்டு பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த முட்புதர்களை வெட்டி அகற்றினோம். பள்ளி வளாகத்தில் வீசப்பட்டு கிடந்த மதுபாட்டில்களை அகற்றி தூய்மைப்படுத்தியுள்ளோம். இன்று (நேற்று) திங்கள்கிழமை பள்ளியை ஊர் மக்களே திறக்க முயற்சி செய்தோம்" என்றனர்.

இதையறிந்த மாதனூர் உதவி தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் பள்ளிக் கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் கேட்டபோது," மின்னூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சில வசதிகள் இல்லாமல் இருந்தது. தற்போது பள்ளி குறித்த தகவல் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில், புதிய கட்டிடத்தை திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். அரசு கட்டிடத்தை பொதுமக்கள் முன்நின்று திறப்பது ஏற்கத்தக்கதல்ல. அதற்கான ஆயத்தப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close