தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையார் ஆகிய இடங்களில் தலா 11 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா 9 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 7 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை உயரும்: இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் 12-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

இவ்வாறு செய்திக்குறி்ப்பில் கூறப்பட்டுள்ளது.