[X] Close

காலம்போன கடைசியில் தயாரிக்கப்பட்ட உயில்: பட்ஜெட் குறித்து வேல்முருகன் விமர்சனம்


tamizhaga-vazhvurimai-katchi-chief-velmurugan-slams-bjp-on-budget

  • kamadenu
  • Posted: 02 Feb, 2019 15:31 pm
  • அ+ அ-

மத்திய இடைக்கால பட்ஜெட் காலம்போன கடைசியில் கலக்கத்துடனும் நடுக்கத்துடனும் தயாரித்த உயில் போலத் தெரிகிறது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இன்னும் 3 மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் 2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டது. இதனை அண்மையில் நிதியமைச்சர் பொறுப்பையும் கூடுதலாகப் பெற்ற அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

வளர்ச்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளாக கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியிலேயே குறியாய் இருந்தது. அதற்காக பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் போன்ற மோசமான திட்டங்களைத் திணித்து மக்களை வறுத்தெடுத்தது மற்றும் கசக்கிப் பிழிந்தது. இதன்மூலம் கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைத்தது. குற்றுயிரும் குலையுயிருமான மக்கள் இப்போது மோடியின் பாஜக ஆட்சியை ஒழித்துக்கட்டுவதே தங்களின் முதல் வேலை என்றிருக்கின்றனர்.

இதனால் அதிர்ந்துபோன பாஜக அரசு, காலம்போன கடைசியில் கலக்கத்துடனும் நடுக்கத்துடனும் உயில் போன்றதொரு இடைக்கால பட்ஜெட்டைத் தயாரித்திருக்கிறது. தேர்தலை மனதில் கொண்டு, கவர்ச்சியான அறிவிப்புகளுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருந்தாலும், சொல்லிக்கொள்ளும்படி அதில் எதுவுமே இல்லை என்பதுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்ட கோரிக்கை. அதிலும், மேல் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததில் 8 லட்சம் வருமான வரம்பை வைத்துவிட்டு, பொது வருமான வரம்பு 5 லட்சம் என்பது தெரிந்தே செய்யும் மோசடி அன்றி வேறன்ன?

அதாபோல்தான் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அறிவிக்கப்பட்டிருப்பதும்!தமிழக மீனவர்களைத் தங்கள் தொழிலிலிருந்தே விரட்டும் இலங்கை அரசின் 50 லட்சம் ரூபாய் அபராதச் சட்டத்தை ஆதரிக்கும் மத்திய அரசு, மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அறிவித்திருப்பதால் பயன் என்ன விளைந்துவிடும்?

விவசாயிகளுக்கு ஆண்டு உதவித்தொகை ரூ.6,000 அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மாதத்துக்கு 500 ரூபாயை வைத்துக்கொண்டு இந்த விலைவாசியில் என்னதான் செய்துவிட முடியும்?

இவை தவிர பட்ஜெட்டில் எல்லாமே பாஜகவின் வழக்கமான வார்த்தை ஜாலங்கள்தான். மிகவும் மனக்குறையோடு நாம் சுட்டிக்காட்டுவது: இந்தத் தேர்தல் நேர பட்ஜெட்டிலும்கூட தமிழகத்தின் நலனுக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை என்பதைத்தான்.

கடந்த நான்கரை ஆண்டுகள் மட்டுமின்றி, எஞ்சிய இந்த மூன்று மாதங்களுக்கும்கூட மத்திய பாஜக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டால் தமிழகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்பது வருத்தமளிக்கிறது" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close