[X] Close

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை; முறையாக விசாரணை நடத்தாத ரயில்வே பெண் எஸ்.ஐ: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


  • முத்தலீப்
  • Posted: 01 Feb, 2019 16:33 pm
  • அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராஜேஷ் (25). காஞ்சி மாவட்டம் கம்மவார்பாளையம் பகுதியில் தங்கி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 25-ம் தேதி மறைமலைநகர் – சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலை மீட்ட தாம்பரம் ரயில்வே போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குடும்ப பிரச்சினை காரணமாக ராஜேஷ் தற்கொலை செய்துகொண்டதாக இந்த வழக்கை ரயில்வே போலீஸார் முடித்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ராஜேஷ் தனது செல்போனில் பேசி பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் ‘‘ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை காரில் ஏற்றிக்கொண்டு இன்னொருவரை பிக்கப் செய்ய பாடி மேம்பாலம் அருகே சாலையோரத்தில் காரில் காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸார் 2 பேர், காரை எடுக்கச்சொன்னார்கள்.

சற்று தள்ளி காரை நிறுத்தியபோது அங்கும் வந்து காரை எடுக்கச் சொன்ன அவர்கள் காரில் பெண் ஊழியர் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல் அவதூறாக திட்டினர். இதற்கு முன் திருவொற்றியூர் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு உள்ளே படுத்திருந்தேன். அங்கும் கார் டயரை லாக் செய்த போலீஸார் ரூ.500 அபராதம் என வாங்கினர், நான் ரசீது கேட்டதற்கு, அவதூறாக திட்டினர்.

என் சாவுக்கு சென்னை போலீஸ்தான் காரணம். என பேசி தங்களது கஸ்டங்களையும் கூறி கடந்த ஆண்டு மணிகண்டனும் இதேபோன்று தற்கொலை செய்துக்கொண்டார் எனக்குறிப்பிட்டு இனி இதுபோன்று நடக்கக் கூடாது என் சாவுதான் கடைசியாக இருக்கவேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரிதானது. ஊடகங்களிலும் பரபரப்புச் செய்தியானது. செல்போன் பதிவுகளை போலீஸார் அழித்தது விமர்சிக்கப்பட்டது. தவறு செய்த போலீஸாரை தண்டிக்கவேண்டும் என நெட்டிசன்கள் பலமாக கண்டித்திருந்தனர். பத்திரிகை செய்தி அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. காவல் ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் ராஜேஷை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டிய போலீஸார் யார் என அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வடக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரியின் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பபவம் நடந்த தேதியில் அண்ணாநகரில் பணியில் இருந்த காவலர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. ராஜேஷுடன் சம்பவ இடத்தில் காரில் இருந்த பெண் டி.எல்.எப் பெண் ஐடி ஊழியரிடமும் இணை ஆணையர் விஜயகுமாரி விசாரணை நடத்தியுள்ளார்.

ஐடி பெண் ஊழியர் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவொற்றியூரில் கார் டயரை லாக் செய்து 500 ரூபாயை பெற்று ரசீது கொடுக்காமல் மிரட்டிவிட்டுச் சென்ற போக்குவரத்து ரெக்கவரி வேன் போலீஸாரையும் பட்டியல் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று ராஜேஷ் தற்கொலை வழக்கை முறையாக விசாரணை நடத்தாமல், அவரது செல்போனில் தடயத்தை அழித்ததாக உறவினர்கள் கூறிய குற்றச்சாட்டின்பேரில் வழக்கின் விசாரணை அதிகாரியான ரயில்வே பெண் எஸ்.ஐ ராமுத்தாய் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரயில்வே ஆய்வாளர் கலையரசியிடமும் விசாரணை நடக்கிறது.

செல்போன் காணொலியை அழித்துவிட்டு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டால் தடயங்களை அழித்தல் சாட்சிகளை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குத்தொடரப்படும் என தெரிகிறது.  

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close