[X] Close

கால்டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு: காவல் ஆணையருக்கு நோட்டீஸ்


  • முத்தலீப்
  • Posted: 31 Jan, 2019 19:25 pm
  • அ+ அ-

போலீஸார் பொதுமக்களை கனிவுடன் அணுகவேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பலமுறை போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை கூறி வந்துள்ளார். ஆனாலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் போலீஸார் கடுமையாகவும் பொதுவெளியில் திட்டுவதும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில போலீஸார் செய்யும் இத்தகைய செயல்களால் பொதுவாக போலீஸார் மீது அதிருப்தி எழுகிறது. கடந்த ஆண்டு கால்டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் போக்குவரத்து போலீஸாரின் அவதூறு பேச்சால் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது நடந்து சில மாதங்களில் திருச்சியில் உஷா என்ற பெண் கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவரால் துரத்தப்பட்டு பின்னர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் போலீஸாரின் மனநிலை குறித்து பொதுமக்கள் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதானது.

இந்த இரண்டு விவகாரங்களையும் மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சென்னை கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் போலீஸாரால் தான் தற்கொலை செய்துக்கொள்வதாக காணொலி வெளியிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்திகள் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் சூமோட்டோவாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து, இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கால்டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close