அரசியல் களத்தில் அதிமுக அமைதி காக்க, தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதானோ என்று சொல்லும் அளவுக்கு, திமுகவுக்குத் தினந்தினம் குடைச்சல் கொடுக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் பாஜகவைக் கடுமையாக எதிர்த்த கட்சிகள் சில, அக்கட்சியை நெருங்கிவருவது போன்ற காட்சிகளும் அரங்கேறுகின்றன. இந்தச் சூழலில், பாஜகவின் மாநிலச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் 'காமதேனு' மின்னிதழுக்கு அளித்த பேட்டி:
எப்படியிருக்கிறது திமுக ஆட்சி?
கரோனாவைக் கட்டுப்படுத்த திறம்பட செயல்பட்ட மாநில அரசுகளின் பட்டியலில், திமுக தலைமையிலான தமிழக அரசும் இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்கெனவே பலமுறை பாராட்டியுள்ளோம். ஆனால், தடுப்பூசி, ஆக்ஸிஜன் சப்ளை போன்றவற்றைத் தமிழக நலனில் பெரிய அக்கறை எடுத்துக்கொண்டு மத்திய அரசு உதவியது என்பதை திமுக ஒருபோதும் பாராட்டிப் பேசியதில்லை. எங்களுக்கு அதில் வருத்தம்தான். முதல் 3 மாதங்களைக் கரோனா காலம் என்று விட்டுவிட்டால், இப்போதுதான் திமுகவின் உண்மையான ஆட்சிக்காலம் ஆரம்பிக்கிறது. அதற்குள்ளாக ஊழல் குற்றச்சாட்டுகள், வன்முறைக் கலாச்சாரம், அரசு அதிகாரிகளை மிரட்டுவது போன்ற செய்திகள் எல்லாம் வரத் தொடங்கியிருக்கின்றன.
கோயில் திறப்பு உள்ளிட்ட மக்களின் சென்டிமென்ட் மீதும் திமுகவினருக்குப் பெரிய மரியாதை இல்லை. மத்திய அரசுடன் எத்தகைய உறவைப் பேணப்போகிறார்கள் என்பது குறித்த தெளிவு இல்லை. சில அமைச்சர்கள் மத்திய அரசைப் பாராட்டுகிறார்கள், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். திமுக ஆட்சியின் ஆரம்ப அறிகுறிகள் இது நல்லாட்சியைக் கொடுப்பதற்கான பாதையில் போகவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. போகப்போக இந்த ஆட்சி மீதான அதிருப்தி கூடும்.
ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் திமுக மகத்தான வெற்றிபெற்றிருக்கிறதே?
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணித்தான் வெற்றிபெற்றார்கள். திமுக வெற்றி பெற்றிருந்தாலும்கூட ஜனநாயகத்துக்குத் தோல்வி என்று எங்கள் மாநிலத் தலைவரும் சொல்லியிருக்கிறார். திமுக இனி தன்னுடைய வழக்கமான அரசியல் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும். நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து செயல்படுவோம். திமுக செய்கிற தவறுகளைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்கிற கட்சியாக பாஜக இருக்கும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கண்கொத்திப் பாம்பாக கவனித்து, அதன் தவறுகளை பாஜகதான் சுட்டிக்காட்டுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அமைதி காக்கிறதே, ஏன்?
பாஜகவைப் பொறுத்தவரைக்கும் எங்கள் அரசியல் எப்போதுமே திமுக எதிர்ப்பு அரசியல்தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அது தொடர்கிறது என்பதுதானே ஒழிய, நாங்கள் ஒன்றும் புதிதாக அவர்களை எதிர்க்கவில்லை. ஸ்டாலினும் தேர்தலுக்கு முன்புவரையில் பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்த்துத்தான் அரசியல் செய்தார்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்த கட்சி எதிர்பாராத தோல்வியடைந்ததால், தொண்டர்களுக்கும் சரி, தலைவர்களுக்கும் சரி சின்ன அதிர்ச்சி, சோர்வு இருக்கலாம். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு அந்தக் கட்சி கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்ளும். நாங்கள் நம்பிக்கையுடன்தான் இருக்கிறோம்.
ஆனால் திமுக, பாஜகவுடன் நெருங்கிவருவதாக தமிழ்தேசிய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பிற துறைகளின் பெயர்களை மாற்றியதுபோல, இந்து சமய அறநிலையத் துறையை ஏன் தமிழர் சமய அறநிலையத் துறை என்று மாற்றவில்லை, பள்ளிக் கல்வித் துறையின் கல்விக் கலை விழா தொடர்பான அரசாணையில், 'கலா உத்சவ்' என்று ஏன் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்களே?
இந்து சமய அறநிலையத் துறையின் பெயரை மாற்றச் சொல்பவர்கள், வஃக்பு வாரியத்தில் இருந்து வஃக்பு என்ற வார்த்தையை நீக்கச் சொல்வார்களா? தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் எல்லாம் தமிழர்கள்தான்; அவர்கள் இந்துக்கள் அல்ல என்று சொன்னால், தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அந்தந்த மதத்தினர் இல்லையா? அவர்களுக்கு முஸ்லிம், கிறிஸ்தவ அடையாளம் இல்லையா? இதெல்லாம் அபத்தமான வாதம். தமிழ் என்பது நம் மொழி அடையாளம்தானே ஒழிய, நம் தேசிய அடையாளம் அல்ல. நமது தேசியம் இந்திய தேசியம்தான். தமிழை ஒரு இனமாகச் சொல்கிற வாதத்தையே நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அந்தத் தமிழ் அடையாளத்தை, இந்துக்களுக்கு எதிராக வைப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்து என்றாலும், தமிழ் என்றாலும் ஒன்றுதான்!
"கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும்" என்று சீமான் சொன்னதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என்று திமுக குற்றம் சாட்டுகிறது. நீங்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியை உங்கள் பரிவாரங்களில் ஒன்றாக, சகோதர சக்தியாக ஏற்கிறீர்களா?
சீமான் எங்கள் சித்தாந்த எதிரி. தமிழகத்தில் வளரவே விடக்கூடாத சக்தி, சீமானின் நாம் தமிழர் கட்சி. நாங்கள் எப்படி அதை எங்கள் சகோதர இயக்கமாக நினைப்போம்? சில பிரச்சினைகளில் எங்களுக்கும், அவருக்கும் கருத்தொற்றுமை இருக்கலாம். உதாரணமாக, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் பெரும்பாலானவை ஒரே குரலில்தான் பேசுகின்றன. அப்படியானால் எந்தக் கட்சிக்கு எந்தக் கட்சி பி டீம்? நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக சொல்வதைத்தான் அதிமுகவும் சொல்கிறது. அதற்காக அதிமுகவை திமுகவின் பி டீம் என்பீர்களா? சீமான் பாஜகவை எதிர்த்துத்தான் அரசியல் செய்கிறார். இந்த ஏ டீம், பி டீம் என்பதெல்லாம் அர்த்தமற்ற வாதங்கள்.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சிமென்ட் விலை மிகக் கடுமையாக உயர்ந்துகொண்டே போகிறது. மற்ற பிரச்சினைகளை கையில் எடுக்கிற பாஜக, இதற்கும் ஒரு போராட்டத்தை அறிவிக்குமா?
நியாயமான காரணத்திற்காக சிமென்ட் விலை உயர்ந்தால் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உயர்ந்திருக்க வேண்டுமே? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சிமென்ட் விலை இப்படிக் கூடுகிறது என்பது பற்றி, தமிழ்நாடு அரசாங்கம் தானாக முன்வந்து மக்களுக்கு விளக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் மட்டும் தாம்தூம் என்று குதிக்கிற திமுகவும், ஊடகங்களும் சிமென்ட், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என்றால் ஏன் அமைதியாக இருக்கின்றன? இதைப் பற்றி அரசாங்கம் விளக்கவில்லை என்றால், சிமென்ட் உற்பத்தியாளர்களின் கூட்டுக்கொள்ளைக்குத் தமிழக அரசே உடந்தையாக இருக்கிறதோ என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகும்.
கட்சித் தலைவர் யார் என்பது தொடங்கி பல்வேறு சிக்கல்களில் அதிமுக சிக்கியிருக்கிறது. ஆனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக பாஜக எந்தக் குரலுமே எழுப்பவில்லையே ஏன்? அதிமுகவின் சரிவு, பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் மவுனமாக ரசிக்கிறீர்களா?
நாங்கள் சசிகலாவின் தலைமையையோ, அவரது தலையீட்டையோ ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் முழுமையாக ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டுத்தலைமையைத்தான் ஆதரிக்கிறோம். அவர்களுடன்தான் எங்கள் கூட்டணி. சசிகலா புதிதாக வந்து குழப்பம் செய்ய முயற்சிக்கிறார். அதிமுக எங்கள் கூட்டணி கட்சி என்பதாலேயே, அதன் ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பது நாகரிகமாக இருக்காது என்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அந்தக் கட்சி இதுவரையில் பல சிக்கல்களில் வெற்றிகரமாக மீண்டுவந்ததைப் போல, இந்தப் பிரச்சினையில் இருந்தும் மீண்டு வந்துவிடும் என்று நம்புகிறோம்.
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிற பாஜக, தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடப்பது பற்றி எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே?
ரெய்டு நடத்தியதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிடமாட்டார். “முதலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். அதன்பிறகு நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார் எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை. இதுவரையில் போடப்பட்ட ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளில் சில, பல பொய்வழக்குகளும் இருந்ததா இல்லையா? அதில் இருந்து நிறையப் பேர் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணமும் உண்டல்லவா? அதனால், இது காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையா, நியாயமான நடவடிக்கையா என்பதைப் பொறுத்திருந்துதான் சொல்ல முடியும்.
கோயில் திறப்பு ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பேசியதை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாகக் கண்டித்திருந்தார். கூடவே, வடமாநிலங்களைவிட தமிழகம் முன்னேறியிருக்கிறது என்றால், அதற்குத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்து?
வடமாநிலங்களுடன் ஒப்பிட்டால், தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை என்ற அர்த்தத்தில் அண்ணன் எச்.ராஜா பேசவில்லையே? கோயில்கள் விஷயத்தை மட்டும்தானே பேசினார்? அதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர, எச்.ராஜாவின் கருத்தையே ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது சரியாக இருக்காது. கோயில்கள் என்பது பாஜகவின் சொத்து மட்டுல்ல, அதிமுகவின் சொத்தும்தானே?
வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவும் கடைசியில் தன் மகனுக்குப் பதவி கொடுத்திருக்கிறாரே?
இந்திய அரசியலின் துரதிர்ஷ்டம் இது. பாஜகவையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தவிர இந்தியாவில் உள்ள அத்தனைக் கட்சிகளுமே வாரிசுக் கட்சிகள்தான். அதிமுகவில் வாரிசு நியமனம் நடக்காததற்குக் காரணம், அதன் தலைவர்களுக்கு உயிரியல் வாரிசுகள் இல்லாததுதான். இல்லையென்றால் அதிலும் நடந்திருக்கும். இதுவரைக்கும் வாரிசு அரசியலே இல்லாத ஒரே பிராந்தியக் கட்சியாக இருந்தது, வைகோவின் மதிமுகதான். அதுவும் வாரிசு அரசியலை நோக்கிப்போய்விட்டது வருத்தம் தருகிறது.