[X] Close

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: அறிக்கை அளிக்க ஆட்சியருக்கு அரசு உத்தரவு


the-new-district-is-headquartered-in-tenkasi

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 14:53 pm
  • அ+ அ-

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 16 வருவாய் வட்டங்கள், 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகளை கொண்டு பரந்து விரிந்திருக்கறது. இம்மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தேர்தல் காலங்களில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அதற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவோர், பொதுமக்களுக்கு அளிக்கும் முக்கிய வாக்குறுதியாக, `தென்காசி தனி மாவட்டம்’ இருந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக பல உறுப்பினர்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்கள், இது குறித்து ஆராயப்படும் என்ற பதிலையே தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, `விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக உருவாக்கப்படும்’ என்று அறிவித்தார்.

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது. இதனால், தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது.

இந்நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், `திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே இக்கடிதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close