தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை வலையில் சிக்கியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பட்டியலில், சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ந்திருக்கிறார். முந்தைய ஆட்சியில், சுகாதாரத் துறையில் நடந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊழல் முறைகேடுகளின் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடிக்குமேல் கரோனோ தடுப்பு மற்றும் மருத்துவ சிசிக்சை கட்டமைப்புக்குச் செலவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. கடந்த ஆட்சியின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறையில் மக்கள் நலனுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போதே ராமதாஸ், வைகோ தொடங்கி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரைக்கும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தனர். ஆனாலும் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அத்தனை குற்றச்சாட்டுக்களுக்கும் அசைந்து கொடுக்காமல் தன் பணியைச் ’செவ்வனே’ செய்து வந்தார்.
உபகரணங்கள் முதல் உணவு வரை...
ஆட்சி மாறியதும் காட்சி மாறும், சுகாதாரத் துறை ஊழல்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக அரசோ கரோனா தடுப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவந்தது. தற்போது கரோனா தாக்கம் குறைந்துவரும் நிலையில், விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில், கரோனா காலத்தில் பல்வேறு விதமாகப் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் என்று பல புள்ளிவிவரங்களை எடுத்து வைக்கிறார்கள் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள்.
கரோனா காலத்தில், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் தொடங்கி உணவு வரை எல்லாவற்றிலும் கூடுதல் தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக, தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்கூட ஒருமுறை சுட்டிக்காட்டியிருந்தார்.
மருத்துவர்கள் பணி நியமனங்களையும்கூட அவுட்சோர்சிங் மூலமாக நியமிப்பதாகக் கூறி, ஒரு தனியார் ஏஜென்சி 2 மாதச் சம்பளத்தை லஞ்சமாகக் கேட்டது அப்போது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரோனா தொற்றின்போது மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் அணிந்துகொள்ள பி.பி.இ கிட் இல்லை. ஆனால், அப்போதைய அமைச்சரோ, "தமிழக அரசிடம் போதிய அளவு பாதுகாப்புக் கவசங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் கேட்டால்கூட பி.பி.இ கிட் தருவோம்" என்று கூறினார்.
ஆனால், உண்மையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும்போது அணிந்துகொள்ளும் உடைதான் (எச்.ஐ.வி கிட்) இருந்தது. ஆரம்ப காலத்தில் கரோனா சிகிச்சையின்போது அந்தக் கிட்டை அணிந்துதான் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணி செய்தனர். இதனால், அவர்களில் பலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. பலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டையும் அப்போது வழங்கவில்லை.
கண்டித்த டெல்லி உயர் நீதிமன்றம்
கரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் கிட் கருவியை, சீனாவிலிருந்து ஒரு கருவி ரூ.900 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அந்தக் கருவியின் விலை ரூ.250 தான். டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்த பின், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல, நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான பொருட்களை வாங்கும் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம், சுமார் ரூ.400 கோடியை எந்த டெண்டரும் இல்லாமல் செலவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆனந்த் என்பவர்தான், அதிக விலைக்கு ரேபிட் கிட்டை வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர். அந்த ஆனந்த், விஜயபாஸ்கருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர்.
சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ‘என்-95’ முகக்கவசங்களும் தரம் குறைந்தவை என்றே மருத்துவர்கள் சொன்னார்கள். அதேபோல், மூச்சடைப்பை சீராக்கும் கருவியையும் அதிகவிலைக்கு அரசு வாங்கியதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தம் ஆயிரம் கருவிகள் ரூ.300 கோடிக்குத் தமிழக அரசு வாங்கியுள்ளது. இதற்காக எந்த டெண்டரும் விடப்பட்டதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. மற்ற நிறுவனங்கள் 3 லட்சத்துக்கும் குறைவாகவே தரத் தயாராக இருந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஒரு நிறுவனத்திடம் இந்தக் கருவிகள் வாங்கப்பட்டதாகவும், இதில் மட்டும் சிலகோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
தவிர்க்கப்பட்ட தணிக்கை
கரோனா காலத்தில் செலவு செய்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு எந்தவிதத் தணிக்கையும் செய்யப்படவில்லையாம். எனவே, நினைத்ததை நினைத்த வகையில் எந்த வரைமுறையும் இல்லாமல் வாங்கிக்குவித்தார்கள். அதேபோல, தமிழகம் முழுவதும் இயங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலவு செய்யப்படும் தொகை பற்றி, கடந்த 10 வருடங்களில் எந்தவிதமான தணிக்கையும் செய்யவில்லை என்கிறார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 300 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கன்னியாகுமரியில் இருப்பவர் கோவைக்கும், கோவையில் இருப்பவர் மதுரைக்கும், மதுரையில் இருப்பவர் வேலூருக்கும் மாற்றப்பட்டார்கள். ஒவ்வொருவரையும் வேண்டுமென்றே வெவ்வேறு மண்டலங்களுக்குத் தூக்கி அடித்துவிட்டு, அவர்களை மறுபடியும் முந்தைய இடத்துக்கே நியமிப்பதற்குப் பல லட்சங்களை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார்கள். இதிலும் சிலபல கோடிகள் அளவுக்கு ‘டிரான்ஸ்ஃபர் ஊழல்’ நடந்துள்ளது என்கிறார்கள்.
பினாமி நிறுவனங்கள்
அப்போது, ஒரு மாவட்டத்துக்குத் துணை இயக்குநராகப் பணியிடம் மாற்றம் பெறுவதற்கு ரூ.5 முதல் 10 லட்சம் வரை லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல, இரண்டு, மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இணை இயக்குநர் பதவிக்கு, 10 முதல் 15 லட்சமும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பணியிட மாற்றத்துக்கு 25 முதல் 50 லட்சம் வரையும் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில், கரோனா காலகட்டத்தில் மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் பல்வேறு ஊழல்கள் நடந்ததாகக் குற்றம்சாட்டுகிறார்கள். ‘அம்மா ஊட்டச்சத்து பெட்டகம்’ வழங்கும் திட்டத்தில், டெண்டர் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. கர்ப்பிணிகளுக்குப் பணமாக வழங்குவது போக, ரூ.4,000 மதிப்பில் தாய்க்கும், சேய்க்குமான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகமும் 2 முறை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்துக்காக ரூ.1,001 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் இந்த ஊட்டச்சத்து கிட் மட்டும், ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கும் அதிகமான தொகைக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரில், அப்போதைய அமைச்சரின் பினாமி நிறுவனங்கள் புகுந்து விளையாடியதாகச் சொல்லப்பட்டது.
அதேபோல, சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கிராமப்புற வளரும் இளம் பெண்களுக்காக மாதவிடாய் கால தன் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின்கீழ் சானிடரி நாப்கின்கள் வாங்கமாலேயே, வாங்கியதாகச் சொல்லி பலகோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இதுபோல, அந்த ஆட்சிக்காலம் முழுவதுமே கமிஷனும், கலெக் ஷனும் நடந்திருக்கிறது என்கிறார்கள்.
‘சட்டத்தை மீறவில்லை!’
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிடம் பேசினோம்.
“ஒரு திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும், எந்த திட்டத்துக்கு எப்படி டெண்டர் விடவேண்டும் என்று மாநில அரசாங்கத்தில் என்னென்ன நடைமுறைகள் உள்ளதோ அதையெல்லாம் தான் அந்தத் துறை அமைச்சராக இருந்த எங்கள் அண்ணன் செய்தார். விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் மீறி அவர் எதையும் எப்போதும் செய்ததில்லை. கரோனா காலகட்டத்தில் எல்லா விஷயத்திலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படியே, முதல்வரின் கண்காணிப்பின்கீழ் அமைச்சர் செயல்பட்டார். அவசர காலத்தில் மக்களின் உயிர்காக்கும் நடவடிக்கைகளிலும், அதற்கான முன்னேற்பாடுகளிலும் அவர் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டார் என்பதை அப்போது நாடே வியந்து பாராட்டியது.
அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளை மக்கள் பாராட்டினார்கள். இப்போது கூறப்படுவடுதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கள். எதிலாவது அரசின் சட்டதிட்டங்களை மீறி அவர் செயல்பட்டிருக்கிறார் என்றால், தவறுகள் நடந்திருக்கிறது என்றால் அதற்கான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் இந்த அரசாங்கம் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். சட்டப்படி அவற்றைச் சந்திக்க எங்கள் அண்ணன் தயாராகவே இருக்கிறார்” என்கிறார்கள் விஜயபாஸ்கர் தரப்பினர்.
திமுக அரசு பதவியேற்றபோது, “கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்பதால், சுகாதாரத் துறையில் நடந்த ஊழல்கள் குறித்துப் பேச இப்போது நேரமில்லை” என்றார் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தற்போது வருமானவரித் துறை நடவடிக்கைகள் விஜயபாஸ்கர் மீது தொடங்கியிருப்பதால், துறைசார்ந்த நடவடிக்கைகள் எதுவும் இருக்குமா என்று கேட்க அமைச்சரைத் தொடர்புகொண்டோம். அவரின் உதவியாளரே தொடர்ந்து அலைபேசியை எடுத்துப் பதில் சொன்னார். எனவே, அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய முடியாமலேயே இந்தக் கட்டுரையை முடிக்கிறோம்.