சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸில் புகார்!


அதிமுக பொன்விழாவையொட்டி, அக்.17-ல் சசிகலா திநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லம் சென்று மரியாதை செலுத்தினார். அங்கு அதிமுக கொடியை ஏற்றிவைத்த சசிகலா, பின்னர் ‘அதிமுக பொதுச்செயலாளர்’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார். இச்சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சசிகலாவின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், விருகை முன்னாள் எம்எல்ஏ ரவி ஆகியோர் கூட்டாக அளித்த அந்த புகார் மனுவில், ”சசிகலா தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவின் கொடியையும், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரையும் தவறான எண்ணத்தோடு பயன்படுத்தி வருகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,

”அதிமுக என்ற கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது. ஆனால், தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா உள் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அவைத் தலைவர் (மறைந்த) மதுசூதனன் ஆகியோரிடம் தான் கட்சி உரிமை உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றமும், இந்தியத் தேர்தல் ஆணையமும் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில், கட்சிக்குள் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார்” என்றார்.

தாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும்போது, மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாத நிலை இருப்பதாகவும், புகார் அளித்த பிறகு புகாரைப் பெற்றதற்கான சிஎஸ்ஆர் எனப்படும் ஒப்புகைச் சீட்டைக்கூட தராமல் இருட்டடிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டிய ஜெயக்குமார், “ஒரு முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? திமுகவும், சசிகலாவும் கைகோத்து அதிமுகவில் பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார்கள்” என்று அடுத்த அஸ்திரத்தையும் ஏவினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, திமுகவினரை பணியில் அமர்த்த திமுக அரசு முயன்று வருவதாகவும் தெரிவித்த அவர், “அம்மா உணவகத்தை மூடவேண்டும் என்று திமுக அரசு நினைத்தால், அதற்கான தகுந்த நடவடிக்கையை அதிமுக மேற்கொள்ளும்” எனவும் எச்சரித்தார்.

x