“வருத்தம் இருந்தும் மதவாத சக்தி வரக் கூடாது என்பதற்காக திமுகவுக்கு வாக்களித்தோம்” - அரசு ஊழியர்கள் சங்கம்


சிவகங்கையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி.

சிவகங்கை: “வருத்தம் இருந்தும் மதவாத சக்தி வரக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்கு வாக்களித்தோம்” என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

அச்சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைத் தலைவர் சாமிகுணம், மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் அந்தோணிசாமி, மாவட்டப் பொருளாளர் மிக்கேலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச்செயலாளர் நூர்ஜஹான் நன்றி கூறினார்.

அக்.5, 6 ஆகிய தேதிகளில் கரூரில் முதலாவது மாநில மாநாட்டை நடத்துவது, அதற்கு தமிழக முதல்வர், அமைச்சர்களை அழைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு பின்னர் தமிழ்ச்செல்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை. 1 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில் அரசுத்துறைகளில் 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளனர்.

அரசு பணிகளில் கைவிடுவதாக கூறிய தொகுப்பூதியம், மதிப்பூதிய முறை தொடர்கிறது. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தருவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 8.60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்தை குறைத்துவிட்டனர்.

சாலைப் பணியாளர்களின் வாழ்வை சிதைக்கும் வகையில் மாநில நெஞ்சாலை ஆணையம் அமைத்தனர். இதுபோன்ற வருந்தங்கள் இருந்தும் மக்களவைத் தேர்தலில் மதவாத சக்தி வரக் கூடாததற்காக திமுக கூட்டணிக்கு வாக்களித்தோம்.

2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.13-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.