[X] Close

அங்குமில்லை இங்குமில்லை: ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கமல்ஹாசனின் ட்வீட்


  • முத்தலீப்
  • Posted: 29 Jan, 2019 19:21 pm
  • அ+ அ-

ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வருகிறது. 2007-ம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, மாணவர்கள் நலன், கஜா புயல் தாக்குதல் , நீதிமன்ற வேண்டுகோள் என பல விஷயங்களுக்காக தங்கள் போராட்டத்தை பல முறை தள்ளி வைத்தனர்.

இப்படியே 12 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் கடந்த மாதம் வீரியமாக தங்கள் போராட்டத்தை துவக்க நீதிமன்றம் தலையிட்டு அரசுக்கு சில ஆலோசனைகள் வழங்கியது. இதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். ஆனால் அரசு பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் விடாப்பிடியாக இருந்ததால் மீண்டும் போராட்டம் துவங்கியது.

போராடும் ஆசிரியர்கள் மீது வலைதளங்களில் பல அவதூறுகள் கிளப்பி விடப்பட்டது. அரசு வேலைக்கு ஆட்கள் எடுப்பதை தடுக்கும் தடையாணைக்கு எதிராகவும் அவர்கள் போராடுவதை கணக்கில் கொள்ளாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் உங்களுக்கு இதற்கு மேலும் சம்பளம் கேட்கிறதா? என்கிற விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மாணவர்கள் கல்வி பாதிப்பு போராடும் ஆசிரியர்களால் மட்டும் பாதிக்கவில்லை அவர்களை அழைத்து பேசாதிருக்கும் அரசாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மற்றவர்கள் பார்க்க மறுக்கிறார்கள் என்பது ஜாக்டோ அமைப்பினரின் பதிலாக இருக்கிறது.

உயர் நீதிமன்றமும் போராடும் ஆசிரியர்களை அழைத்து ஏன் பேசவில்லை, தற்காலிகமாக ஆட்களை ஏன் எடுக்கிறீர்கள் என சரமாரியாக அரசுக்கு கேள்விகளை வைத்தது. அரசியல் கட்சிகள் அனைத்தும் போராடும் அமைப்பினரை அழைத்து பேச கோரிக்கை வைத்தும் அரசு அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் ஒரு கருத்தை கூறியுள்ளார். இதை அவரது பதிவுக்கு கீழ் நெட்டிசன்கள் ஒரு கருத்தாக உறுதியாக சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் ட்வீட்:

கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை.

பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல். ” என பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close