[X] Close

சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகளின் மனதை மாற்றுவார் ஐயப்பன்: பந்தளம் மன்னர் வர்மராஜா நம்பிக்கை


sabarimalai-ayappan-case

வர்ம ராஜா

  • kamadenu
  • Posted: 28 Jan, 2019 18:09 pm
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மனதை மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக பந்தள மன்னர் வர்ம ராஜா தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கேரள மாநிலம் பந்தள மகராஜாவின் வாரிசான வர்மராஜா நேற்று ஆம்பூருக்கு வந்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

சபரிமலைக்கு அரச குடும்பத்தினர் கூட வரக்கூடாது என்று ஐயப்பன் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. இதை ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்போதைய மன்னரின் வேண்டுகோளை ஏற்று மகரஜோதி தரிசனத்துக்கு மட்டுமே அரச குடும்பத்தினர் வருமாறு ஐயப்பன் சம்மதித்ததால், ஆண்டு தோறும் மகர ஜோதிக்கு அரச குடும்பத்தினர் சென்று வருகின்றனர்.

பிரம்மச்சாரியான ஐயப்பனை தரிசிக்க அவரை போலவே பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்கள் தான் சபரி மலைக்கு சென்று வருகின்றனர். சபரிமலைக்கென தனியாக சில வழிமுறைகளும் விதிமுறைகளும் பல ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதனை மாற்றுவது முறையல்ல. இது தெய்வ குற்றமாகும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து பந்தள அரச வம்சத்தினரையோ, தந்திரி குடும்பத்தினரையோ, பக்தர்களிடமோ எந்தவித கலந்தலோசனையும் கேரள அரசு செய்யவில்லை. கேரள போலீஸாரின் கெடுபிடி காரணமாக, சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.

ஐயப்பன் கோயில் உண்டியல் காணிக்கையும் குறைந்துவிட்டது. 10-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண் பக்தர்கள் எவரும் சபரிமலைக்கு செல்ல விரும்பவில்லை. செல்லவும் மாட்டோம் எனக் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மனதை சபரிமலை சாஸ்தா ஐயப்பன் மாற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும், பக்தர்களுக்கும் குறையாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர், தென்காசி கிருஷ்ணன், முத்துராமன், சரவணன், துர்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close