[X] Close

கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் - சென்னை; வட்டப் பாதையில் மின்சார ரயில் சேவை


ringroute-unit-train

மின்சார ரயில்

  • kamadenu
  • Posted: 27 Jan, 2019 10:25 am
  • அ+ அ-

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னைக்கு வட்டப் பாதையில் முதல்முறையாக மின்சார ரயில்சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐடி, வாகன உற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் அதிகரித்துள்ள நிலையில் மின்சார ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, மின்சார ரயில்சேவையை நீட்டிக்கும் வகையில் புதிய பாதை அமைத்தல், முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் பல்வேறு பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, தக்கோலத்தில் இருந்து அரக்கோணம் வரை 10 கி.மீ தூரத்துக்கு புதிய மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு, மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த புதிய தடத்தில் தெற்கு ரயில்வே அதிகாரிகள், டிராலி மற்றும் ரயில்களை இயக்கி, சோதனை நடத்தி வந்தனர். தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் தக்கோலம் - அரக்கோணம் இடையே நேற்று முன்தினம் 110 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த தடத்தில் ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் முதல்முறையாக வட்ட பாதையில் மின்சார ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டெல்லி, கொல்கத்தாவில் ஏற்கனவே வட்டப் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தக்கோலம் - அரக்கோணம் இடையே மின்மயமாக்கல் பாதையுடன் கூடிய புதிய பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதில், ரயில்சேவையை தொடங்க பாதுகாப்பு ஆணையரகம் விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னைக்கு வட்ட பாதையில் முதல்முறையாக மின்சார ரயில்சேவையை விரைவில் தொடங்கவுள்ளோம்.

இதனால், பொதுமக்கள் விரைவாகவும், ஒருங்கிணைந்த ரயில்சேவையையும் பெற முடியும். குறிப்பாக அரக்கோணம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற முக்கிய ரயில் முனையங்களுக்கு செல்ல முடியும். மக்கள் கூடுதலாக மின்சார ரயில்சேவையை பெற முடியும்’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close